கரிசல் இலக்கியத்தின் தந்தை கிரா காலமானார்

ஜெ.முருகன்
கி.ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன்
கலை

கரிசல் மக்களின் வாழ்க்கையை அந்த மண் வாசனையோடு, அவர்களின் மொழியில் பதிவு செய்தவர் கி.ராஜநாராயணன். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் கிராமத்தில் 1923-ல் பிறந்த கி.ராவின் இயற்பெயர் ஸ்ரீகிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜம். தந்தையுடன் விவசாயம் செய்துவந்த கி.ரா ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். தனது 40-வது வயதிற்கு மேல் எழுதத் தொடங்கிய கி.ராவின் முதல் சிறுகதையான ’மாயமான்’ 1958-ம் ஆண்டு சரஸ்வதி இதழில் வெளியானது.

’நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். அப்போதுகூட பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப்பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா, கரிசல் காட்டு மக்களின் வாழ்க்கை, வாழ்க்கைப்பாடுகள், நம்பிக்கை, துன்பங்கள் போன்றவற்றைத் தனது எழுத்தின் மூலம் காட்சிப்படுத்தியவர். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய கி.ரா, கரிசல் வட்டார அகராதியை உருவாக்கி, வட்டார மொழிக்கு அகராதியை உருவாக்கியவர் என்ற பெருமையை உடையவர்.

’வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர்’ என்றழைக்கப்படும் இவர், ’கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக 1991-ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவர். இலக்கிய சிந்தனை, தமிழக அரசின் விருது, கனடா இலக்கியத் தோட்டம் அமைப்பின் தமிழ் இலக்கியச் சாதனை உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவரது படைப்புகளை அலங்கரித்திருக்கின்றன. கதவு, கி.ரா.பக்கங்கள், கண்ணீர், கோமதி போன்றவை இவரது படைப்புகளில் முக்கியமானவை. தேர்ந்த கதைசொல்லியான இவர், கொரோனா காலத்தில் தனது கைகளால் எழுதிய ‘அண்டரெண்டப் பட்சி’ என்ற நூலை கையெழுத்துப் பிரதியாகவே வெளியிட்டார். அதனை அச்சில் ஏற்றாமல் கைப்பிரதியாகவே வாசகர்கள் படிக்க வேண்டும் என்பது கி.ராவின் ஆசை. அது அப்படியே நிறைவேற்றப்பட்டது.

கி.ரா

99-வது வயதில் வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்த கி.ரா, கடந்த நான்கு நாள்களாகச் சரியாக உணவருந்தாமல் சிறிதளவும் பால் மட்டுமே குடித்து வந்திருக்கிறார். இந்நிலையில்தான் நேற்று 17-ம் தேதி இரவு 11.45 மணியளவில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் அரசுக் குடியிருப்பில் உயிரிழந்தார்.