வழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி ! – தோழர் மருதையன்

பிப்ரவரி 25, 2009

நேற்றைய தினமணியில் (24 பிப்) வழக்குரைஞர் கே.எம்.விஜயன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். போலீசின் வெறித்தாக்குதலுக்கு ஆளான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கும், சிங்கள இராணுவத்தின் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழ் மக்களுக்கும் எதிராக நஞ்சைக் கக்கும் விதத்தில் அவர் எழுதியுள்ள அந்த கட்டுரையின் தலைப்புசத்யமேவ ஜெயதே’.

தமிழ் உணர்வு, பார்ப்பனிய எதிர்ப்பு ஆகிய கருத்துகளை எதிர்ப்பதும், சுப்பிரமணியசாமி போன்றஜனநாயகவாதிகளை’ ஆதரிப்பதும்தான் வழக்குரைஞர் விஜயனின் கொள்கை. தனது கொள்கையை நிலைநாட்டுவதற்காகவும், சட்டத்தின் ஆட்சி என்ற பெயரில் போலீசு ஆட்சியை நியாயப்படுத்துவதற்காகவும் அவர் வரலாற்றைப் புரட்டுகிறார். மிகவும் தரம் தாழ்ந்த முறையில் கண் முன்னால் நடந்த உண்மைகளையும் திரிக்கிறார்.

தமிழ் உணர்வின் வரலாறு குறித்த அவரது பார்வை துக்ளக் பார்வை. அதற்கு இப்போது நாம் பதில் சொல்லவில்லை. நிகழ்காலம் குறித்து அவர் கூறுவனவற்றில் சத்தியம் உள்ளதா என்பதை மட்டும் பார்ப்போம்.

“17ம் தேதியன்று சு.சாமி மீது முட்டையை வீசியது மட்டுமின்றி, சுமார் 20 வழக்குரைஞர்கள் அவரை சாதிப்பெயர் சொல்லிக் கீழ்த்தரமாகத் திட்டினார்கள். அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சி தொடங்கியவுடன், சுப்பிரமணிய சாமி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பொய்ப்புகார் கொடுத்தார்கள்” என்கிறார் விஜயன்.

17ம் தேதியன்று ஈழப்பிரச்சினைக்காக வழக்குரைஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு நடந்து கொண்டிருந்தது. சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை மேற்கொண்டதை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்திருந்த மேல் முறையீட்டு மனு, அனுமதிக்காக (admission) அன்று விசாரணைக்கு வந்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை அனுமதிப்பதா என்பதையே உயர்நீதிமன்றம் முடிவு செய்யவில்லை.

இந்த வழக்கில் எதிர் மனுதாரர்கள் அரசும், சிவனடியார் ஆறுமுகசாமியும். party in person ஆக வந்திருந்த 80 வயதான எதிர்மனுதாரர் ஆறுமுகசாமி, நீதிமன்ற அறையின் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார். இந்த வழக்கில் அரசுக்கு ஆதரவாகத் தம்மையும் சேர்த்துக்கொள்ளச் சொல்லி implead செய்த ஒரு வைணவப் பெரியவரும் இன்னொரு மூலையில் நின்று கொண்டுதானிருந்தார். வழக்கம் போல பல வழக்குரைஞர்களும் நின்று கொண்டுதானிருந்தார்கள்.

இந்நிலையில், அரசுக்கு எதிராகத் தன்னையும் அந்த வழக்கில் ஒரு மனுதாரராகச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்திற்கு வந்தார் சு.சாமி. மூத்த வழக்குரைஞர்கள் அமரும் நாற்காலியில் அவருக்கே உரிய முறையில் தெனாவெட்டாக உட்காரவும் செய்தார். நீதிமன்றம் துவங்கியவுடனே, அன்றைய பட்டியலில் 60ஆவது இடத்தில் இருந்த தீட்சிதர் வழக்கை முதலில் விசாரிக்கவேண்டும் என்று கோரினார் சாமி.

“வக்கீல்களையும் தண்டிக்கவேண்டும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்கிறாரே விஜயன், சுப்பிரமணியசாமி மட்டும் கொஞ்சம் அதிகமாக சமமா? வக்கீல் அல்லாத வேறு யாராவது ஒரு குப்பனோ சுப்பனோ வக்கீல்களுக்கான நாற்காலியில் அமர்ந்து காலாட்ட முடியுமா? அல்லது admit ஆகாத ஒரு மேல்முறையீட்டில், சம்மந்தமில்லாத யாரோ ஒரு நபர் தன்னையும் implead செய்யவேண்டும் என்று மனுப் போட்டு, கோர்ட் தொடங்கியவுடனே “என் வழக்கை எடு” என்று கேட்பதை நீதிமன்றம்தான் அனுமதித்திருக்குமா?

சு.சாமிக்கு வழங்கப்பட்ட இந்த ஸ்பெசல் சலுகைகளுக்கு காரணம் என்ன?

இந்த வழக்கில் வெற்றி பெறுவதற்காக சிறப்பு பூசை நடத்த பிப்ரவரி 13 வெள்ளிக்கிழமை மாலை சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு வந்தார் சு.சாமி. அன்று சுமார் ஒரு மணி நேரம் சிற்றம்பல மேடை சுப்பிரமணியசாமி மேடையானது. பக்தர்கள் யாரும் அங்கே அனுமதிக்கப்படவில்லை.

நடராசன் கோயிலிலும், நீதியின் கோயிலிலும் சு.சாமிக்கு சட்டவிரோதமாகவும், மரபுகளுக்கு விரோதமாகவும் வழங்கப்பட்ட இந்த சிறப்பு மரியாதைகளுக்குக் காரணம் அவரது சாதியா, அல்லது அவரது அரசியல் தரகுத் தொழிலா அல்லது அம்மாவின் உருட்டுக் கட்டையாக அண்மையில் அவர் எடுத்திருக்கும் அவதாரமா? உருட்டுக் கட்டை உணர்த்திய சத்தியம் நம்மைவிட விஜயனுக்குத்தானே அதிகமாகத் தெரியும்!

முட்டை எறிந்தவர்கள் 20 வழக்குரைஞர்கள் என்ற புள்ளிவிவரம் விஜயனுக்குத் தெரிந்திருக்கிறது. சி.பி. விசாரணை, பெஞ்சு விசாரணையெல்லாம் தொடங்குவதற்கு முன்னதாகவே குற்றவாளிகள் பட்டியலைக் கையில் வைத்திருக்கிறார் விஜயன். ஆனால் அன்று அங்கே அமர்ந்திருந்த நீதிபதிகளுக்கு அது தெரியவில்லையே! அவர்கள் விசாரணைக்கு அல்லவா உத்தரவிட்டிருக்கிறார்கள். விஜயன் கூறும் சட்டத்தின் ஆட்சியில் விசாரணையே இல்லாமல் தண்டித்துவிடவேண்டும் போலும்!

சுப்பிரமணியசாமிக்கு எதிரான வன்கொடுமைப் புகாரும் பொய்ப்புகார் தானாம். அதுவும் விஜயனுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. ஏனென்றால், “தன் மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞர் பெயரோ அல்லது சாதியோ சு.சாமிக்குக் கண்டிப்பாகத் தெரியாது” என்கிறார் விஜயன். அந்த அரிச்சந்திரனுக்கு இந்த விஜயன் வக்காலத்து! பொருத்தமாகத்தான் இருக்கிறது.

தனக்குத் தெரியாத, ஆதாரமில்லாத எதையும் எந்தக் காலத்திலும் பேசாதவரல்லவா சு.சாமி! ” என்னைக் கொலை செய்வதற்கு புலிகளுடன் இரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் ஜெயல்லிதா” என்று 1992 வில் குற்றம் சாட்டினார் சு.சாமி. உடனே சு.சாமிக்கு எதிராக ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

‘புனிதமான’ உயர்நீதி மன்ற அறைக்கு வெளியே அம்மாவின் மகளிரணியினர் அம்மண டான்ஸ் நடத்தியதும் ஆயுதங்களைக் கொண்டு தாக்க முயன்றதும் அப்போதுதான். வெளியே ‘டான்ஸ்’ ஆடுவதைக் காட்டிலும் ‘உள்ளே’ முழக்கமிடுவதுதான் பெரிய நீதிமன்ற அவமதிப்பு போலும்! நீதிமன்ற அறைக்கு வெளியே அன்று வீசப்பட்ட அரிவாளைக் காட்டிலும், இன்று உள்ளே வீசப்பட்ட முட்டைதான் அதிபயங்கரமான ஆயுதம் போலூம்! அன்று டான்ஸ் ஆடியவர்களோ, அவர்களை ஆடவைத்தவர்களோ இன்றுவரை நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை. அந்தப் பிரச்சினையை ஃபுல் பெஞ்சோ ஆஃப் பெஞ்சோ விசாரிக்கவும் இல்லை.

இதே சுப்பிரமணியசாமிக்கு ராஜீவ் கொலையில் தொடர்பு இருக்கிறது என்று பிரமாண வாக்குமூலம் கொடுத்தார் ஜனதா கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி. அதனை ஆதரித்து அதே ஜெயின் கமிசனில் வாக்குமூலம் தாக்கல் செய்தார் ஜெயலலிதா.

இன்று அதே சாமியும், அதே மாமியும் சேர்ந்துகொண்டு முட்டையின் கவிச்சு வாடை நீதிமன்றத்தின் புனிதத்தைக் கெடுத்து விட்டதாகக் கூக்குரலிடுகிறார்கள். இந்த “356 ஆர்க்கெஸ்டிரா”வில் சம்மந்தமில்லாதவர் போலத் தன்னைக் காட்டிக்கொள்ளும் விஜயன்சட்டத்தின் ஆட்சி” என்று சுருதி மாறாமல் ஒத்து ஊதுகிறார்.

சுப்பிரமணியசாமியின் மீது வழக்குப் பதிவு செய்ய வற்புறுத்தித் தொடங்கிய விஷயம் வன்முறையைத் தூண்டிவிட்டதாம்! ஒரு வாதத்துக்காக அது பொய்ப் புகார் என்றே வைத்துக் கொள்வோம். அந்தப் புகார் பொய்யானது என்று அன்றைக்கு நீதிமன்றத்திலேயே இல்லாத விஜயனுக்குத் தெரிந்திருப்பதைப் போலவே, அன்று வெளியில் தள்ளி கதவு சாத்தப்பட்ட போலீசுக்கும் அது பொய்ப்புகார் என்பது தெரிந்திருக்கிறது. என்ன ஆச்சரியம்?

அய்யா, அது பொய்ப்புகாராகவே இருக்கட்டும். அந்தப் புகாரைப் பதிவு செய்து கொண்டு, விசாரணை நடத்தி, அது பொய்ப்புகார் என்று முடிவு செய்யும் உரிமை போலீசுக்கு இருக்கிறதே! ஒரு வேளை போலீசே புகாரைப் பதிவு செய்துவிட்டாலும், அதனை சட்டப்படி எதிர்கொண்டு முறியடிக்கும் உரிமையும் சு.சாமிக்கு இருக்கிறதே! அப்படியிருக்கும்போது, ‘வழக்கைப் பதிவு செய்ய வற்புறுத்தினால்’ அதன் காரணமாகவே எப்படி வன்முறை வெடிக்கும்?

தனக்கு விருப்பமில்லாத செயலைச் செய்யுமாறு ஒருவரை வற்புறுத்தினால் அவ்வாறு வற்புறுத்தப்படுபவருக்குத்தான் கோபம் வரும். வற்புறுத்தப் படுபவர்கள் சட்டத்தின் காவலர்கள் அல்லவா? போலீசாவது, பொய்வழக்குப் போடுவதாவது? அந்தப் பொய்ப்புகாரைக் கண்டு விஜயனைப் போலவே சத்திய ஆவேசத்தில் துடித்து, பின்னர் வெடித்து விட்டார்கள் போலிருக்கிறது!

விஜயனின் வாதப்படி வன்முறையைத் தொடங்கியவர்கள் போலீசுதான் என்ற முடிவுக்கே யாரும் வரமுடியும். எழுதுவது பொய், அதற்கு சத்யமேவ ஜெயதே என்று தலைப்பு போட்டு விட்டால் எல்லோரும் நம்பிவிட வேண்டுமா?

முட்டை வீச்சு சம்பவம் தொடர்பாகத் தான் சந்தேகிக்கும் வழக்குரைஞர்களுடைய வீடுகளுக்கு இரவு நேரத்தில் சென்று, வழக்கம்போல அவர்களது குடும்பத்தினரை மிரட்டியிருக்கிறது போலீசு. எனினும் ஒருவரை மட்டுமே கைது செய்ய முடிந்திருக்கிறது. மற்றவர்களை உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் வைத்தே கைது செய்வது என்பதே போலீசின் திட்டம். அவ்வாறு கைது செய்யும்போது மற்ற வழக்குரைஞர்கள் திரண்டு நின்று எதிர்ப்பு தெரிவித்தால், அதனைக் கையாள்வதற்குத் தேவையான அதிரடிப்படை முதல் ஐந்தாம்படை வரை அனைத்தையும் போலீசு தயார் நிலையில் வைத்திருந்தது. இது போலீசால் திட்டமிட்டுத் தொடுக்கப்பட்ட தாக்குதல்.

இப்படி ஒரு தாக்குதல் தொடுப்பதற்குப் பொருத்தமான சூழ்நிலைக்காக மட்டும்தான் அவர்கள் காத்திருந்தார்கள். ஈழப்பிரச்சினைக்காக வழக்குரைஞர்கள் தீவிரமாகப் போராடுகிறார்கள் என்பது மட்டும் போலீசின் கோபத்துக்குக் காரணம் அல்ல. வழக்குரைஞர்கள் என்ற பிரிவினருக்கு எதிராக போலீசு துறையைச் சேரந்த உயரதிகாரி முதல் கான்ஸ்டபிள் வரை வன்மம் வைத்திருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. குறிப்பிட்ட போலீசு அதிகாரிகளுக்கு விசேட காரணங்களும் இருக்கலாம். முட்டை வீச்சு சம்பவம், அதைத் தொடர்ந்து சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா கூட்டணியால் எழுப்பப்பட்ட “356 கோரிக்கை”, ஊடகங்கள் அரசுக்கு எதிராகப் போட்ட கூச்சல், இவையனைத்தையும் கண்டு திமுக அரசு பீதியடைந்திருந்தது. இத்தகைய சூழ்நிலையில்எதை வேண்டுமானாலும் செய், ரிசல்ட்டு காட்டு” என்று அரசாங்கம் போலீசுக்கு வழங்கியிருக்கக் கூடிய அனுமதியைத் தனது கொலைவெறியாட்டத்துக்கான லைசன்சாக மாற்றிக் கொண்டுவிட்டது போலீசு.

வழக்குரைஞர்களின் மண்டையை உடைத்தது, எலும்பு நொறுங்கும் வகையில் அடித்தது, சேம்பர்களில் புகுந்து அடித்தது, நீதிமன்ற அலுவலக ஊழியர்களையெல்லாம் அடித்து நொறுக்கியது, நீதிமன்ற அறைகளையும், வழக்குரைஞர்களின் வாகனங்களையும் நொறுக்கியது.. இவையனைத்தும் காட்டுவது என்ன? நீதித்துறை என்ற நிறுவனத்துக்கு எதிராக போலீசு துறையின் மனதில் கொழுந்துவிட்டு எரியும் வெறிதான் அது. 20 பேரைக் கைது செய்ய வேண்டும் என்பது ஒரு முகாந்திரம் மட்டும்தான். அனைவருக்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் தெரிவிக்க விரும்பிய செய்தி. அதனால்தான் நீதிபதிகளைத் தாக்குவதற்குக் கூட அவர்கள் தயங்கவில்லை.

17ம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் போலீசின் இந்தக் கொலைவெறியாட்டத்தை லைவ் ஆக ஒளிபரப்பிய சி.என்.என் – ஐ.பி.என் தொலைக்காட்சி, இது குறித்து தொலைபேசியின் மூலம் சுப்பிரமணிய சாமியிடம் கருத்து கேட்டது. “சட்டத்தை நிலைநிறுத்த இந்த தடியடி அவசியம்தான்” என்றார் சாமி. “அதற்காக உயர்நீதி மன்றத்திற்கு உள்ளேயே தடியடி நடத்தலாமா? என்று நிருபர் கேட்டதற்கு “அதிலென்ன தவறு, சட்டத்தை போலீசு எந்த இடத்திலும் நிலைநாட்டலாம்” என்று பதிலளித்தார் சாமி. “என்ன இருந்தாலும் அவர்கள் வழக்குரைஞர்கள் அல்லவா?” என்று கேள்வி எழுப்பினார் நிருபர். “இவர்களெல்லாம் வழக்குரைஞர்களே அல்ல, மாமாப்பயல்கள் (Touts). வழக்குரைஞர் சமூகத்தையே இவர்கள் பிளாக்மெயில் செய்கிறார்கள்” என்று திமிராகப் பதில் சொன்னார் சாமி.

மாமாப்பயல்கள் என்ற சொல்லைக் கொஞ்சம் மாற்றி, “தொழில் இல்லாத வழக்குரைஞர்கள்” என்று போராடுபவர்களை நக்கல் செய்கிறார் விஜயன். “திறமையில்லாதவர்கள், சட்டம் தெரியாதவர்கள், வக்கீல் தொழிலின் கவுரவத்தைக் கெடுப்பவர்கள்” என்று வெவ்வேறு சொற்களில் இவர்கள் சொல்ல விரும்பும் கருத்து என்னவோ ஒன்றுதான். “கோட்டா பேர்வழிகள்” என்பதுதான் அது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குப் போட்டவரல்லவா விஜயன்? அன்று இவர் உருட்டுக் கட்டை அடி வாங்கியபோதுநீதிமன்றப் புறக்கணிப்பு’ செய்தார்களே வழக்குரைஞர்கள், அவர்களெல்லாம் தொழில் உள்ள வழக்குரைஞர்களா அல்லது இல்லாத வழக்குரைஞர்களா என்பதை விஜயன் விசாரித்தாரா?

பிப் 19-ஆம் தேதி நடந்த வன்முறையின் சாபக்கேடு என்னவென்றால், சுப்பிரமணியன் சுவாமியின் வழக்கு சம்பந்தமாக வன்முறை செய்த வழக்குரைஞர்களோ அல்லது அதைத் தூண்டிய தலைவர்களோ அடிவாங்கவில்லை… இந்த சம்பவத்துக்காக போலீசு மீது மட்டுமல்லாது மற்ற காரணகர்த்தாக்கள் மீதும் நாம் கோபம் கொள்ள வேண்டும்” என்கிறார் விஜயன்.

அதாவது, “நீ ஏன் சு.சாமியை முட்டையால் அடித்தாய், உன்னால்தான் நான் தடியடி வாங்க நேர்ந்தது” என்று போலீசிடம் அடிபட்ட வழக்குரைஞர்கள், சு.சாமி மீது முட்டை எறிந்தவர்களுடன் சண்டைக்குப் போகவேண்டும் என்கிறார் விஜயன்.

அப்படியா, சு.சாமி முட்டையடி பட்டால், நீதிபதிகளும் கூட கட்டையடி படவேண்டுமா? எந்தச் சட்டம் அப்படிக் கூறுகிறது?

கொலைக்குற்றவாளி சங்கராச்சாரியைக் கைது செய்தபோது, அவரைப் பாதுகாப்பதற்குதொழில் உள்ள’ வழக்குரைஞர்களும் ஆடிட்டர்களும் மருத்துவர்களும் அணிவகுத்து நின்றார்களே, அவர்களைக் கலைப்பதற்குலேசான’ தடியடி கூட நடத்தப்படவில்லையே. கொலைக்குற்றத்தை விடக் கொடியதா, முட்டை வீசிய குற்றம்? விஜயன் விரும்பும்சட்டத்தின் ஆட்சியில்’ மனுமருமச் சட்டத்தின் நாற்றமடிக்கிறதே!

முட்டை வீச்சு நடந்தது உண்மைதான். வீசியவர்களை யாரென்று கண்டுபிடிக்கத்தான் விசாரணை நடக்கிறது. அந்த விசாரணையே சரியா தவறா, நீதிபதிகள் நீதிமன்றத்தில் பதிவு செய்த விவரங்கள் சரியா தவறா என்பன போன்ற கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும்.

முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த போலீசே அந்த 20 பேர் யார் என்பதை இன்னும் வெளியிடவில்லை. எனினும்முட்டை வீச்சு தொடர்பாக இன்னின்ன வழக்குரைஞர்களை விசாரிக்க வேண்டும்” என்று போலீசார் நீதிமன்றத்தையே அணுகியிருக்கலாம். பார் கவுன்சிலை அணுகியிருக்கலாம். சம்மந்தப்பட்ட வழ்க்குரைஞர்களுக்கே சம்மன் அனுப்பி அழைத்திருக்கலாம். நள்ளிரவில் அவர்களது குடும்பத்தினரை மிரட்டுவதற்கும், உயர்நீதிமன்ற வளாகத்திலேயே வளைத்துப் பிடிப்பதற்கும் அவர்கள் முகவரி இல்லாத கேடிகளா? மேற்கூறிய வகையிலான சட்டபூர்வமான வழிமுறைகளைப் போலீசு பின்பற்றியிருந்தால், இந்த மோதலுக்கே இடமில்லையே. சட்ட அறிவு இல்லாத ஒரு பாமரனுக்குக் கூட புரியக்கூடிய இந்த உண்மை மூத்த வழக்குரைஞர் விஜயனுக்குப் புரியாமல் போனது ஏன்?

ஏனென்றால்சக சுப்பிரமணியசாமி’ மீது முட்டை வழிந்ததற்கே பதறித் துடிக்கும் விஜயனின் இதயம், ‘சக வழக்குரைஞர்களின்’ முகம் முழுவதும் ரத்தம் வழிவதைக் கண்டபிறகும் துடிக்காதது ஏன்?

உள்ளே சு.சாமியை அடித்தால் கருத்துரிமைக்கு ஆபத்து! சட்டத்தின் ஆட்சிக்கு ஆபத்து!! வாசலில் வைத்து வழக்குரைஞர்களை அடித்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதலா? அதென்ன, நீதிமன்ற அறை மட்டும்தான் புனிதமானதா? அதன் தாழ்வாரங்கள் சாக்கடைகளா? இது எந்த ஊர் நியாயம்?

“சாமியையே அடித்துவிட்டார்கள்” என்பதுதான் இவர்களது குமுறல். அதை மறைத்துக் கொள்ளத்தான “உள்ளேயே அடித்துவிட்டார்கள்” என்று கண்ணீர் விடுகிறார்கள். “நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டதனால் நீதியின் புனிதம் கெட்டுவிட்டதாக” இவர்கள் யாரும் அலறவில்லை. ஏனென்றால், மண்டை உடைக்கப்பட்டவர்களெல்லாம் சு.சாமி அளவுக்குப் புனிதமானவர்கள் அல்லவே!

விஜயன் முதலானோரின் பார்வையில் சிலருடைய உரிமைகள் புனிதமானவை. வேறு சிலரின் உரிமைகள் அவ்வளவாகப் புனிதமற்றவை. தடியடிக்கு ஆளான வழக்குரைஞர்களின் உரிமை மட்டுமல்ல, குண்டு வீச்சுக்கு ஆளாகும் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளும் கூட அவரைப் பொருத்தவரை புனிதமற்றவைதான்.

ஈழத்துக்கு எதிரானகருத்தைக் கொண்டிருப்பவர்’ என்ற காரணத்துக்காக சு.சாமி மீது முட்டை வீசியவர்களை பாசிஸ்டுகள் என்கிறார் விஜயன். “வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம்” என்பது கூட ஈழத்தமிழ் மக்களின் கருத்துதான். அந்தக்கருத்தின் மீதுதான்’ குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது சிங்கள இராணுவம்.

தனக்கு நேரடியாகத் தொடர்பில்லாத வழக்காக இருந்தாலும் அதில் தலையிடும் புனிதமான உரிமையை அரசியல் சட்டம் சு.சாமிக்கு வழங்குகிறது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் தங்களுக்கு நேரடியாகத் தொடர்புள்ள, தாங்கள் பிறந்து வளர்ந்த தாய் மண்ணில் தாங்கள் விரும்பும வகையிலான ஒரு அரசை அமைத்துக் கொள்ளும்புனிதமான’ உரிமையை சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு வழங்க மறுக்கிறதே, என்ன செய்யலாம்?

“வழக்கறிஞர்களுக்கு சர்வதேசச் சட்டம் தெரியும். இந்திய அரசின் இறையாண்மை, தலையீட்டின் முன் விளைவுகள் மற்றும் பின் விளைவுகள் தெரியும். இவை அனைத்தும் தெரிந்தும்.. நீதிமன்றப் புறக்கணிப்பும், அது தொடர்பாய் வன்முறையும் அதன் தொடர் விளைவாய்ப் போலீசு வன்முறையும் நேர்ந்ததற்கு வழக்குரைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என்கிறார் விஜயன்.

தெரிந்த்தனால்தான் வழக்குரைஞர்களை இந்தப் போராட்டத்தில் முன் நிற்கிறார்கள். 80 களில் ஈழப் போராளிக்குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்ததும், பின்னர் இலங்கையின் இறையாண்மையை மீறி ராஜீவ்ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைத் திணித்ததும், இந்தியப் படையை அனுப்பியதும், அது தோல்வியுற்றதால், சிங்கள அரசுக்கு இராணுவ உதவி செய்வதுடன், இன்றைய போரை சிங்கள அரசுடன் கைகோர்த்து நின்று வழிகாட்டி இயக்குவதும் வழக்குரைஞர்களுக்குத் தெரியும். “இலங்கையின் இறையாண்மையில் தலையிட முடியாது” என இன்றைக்கு கற்புநெறி பேசும் மத்திய அரசின் கயமைகள் அனைத்தும் வழக்குரைஞர்களுக்குத் தெரியும். அதனால்தான் வழக்குரைஞர்கள் போராடுகிறார்கள்.

போராடும் வழக்குரைஞர்கள் யாரும் இலங்கையில் தலையிடச் சொல்லவில்லை. ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராகவும், சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் தற்போது இந்திய அரசு தலையிட்டுக் கொண்டிருக்கிறதே, அந்தத் தலையீட்டை நிறுத்தத்தான் சொல்கிறார்கள். “இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்று” என்று யாரும் கேட்கவில்லை. “ஒரு இனவெறிப் போரைத் தடுத்து நிறுத்த குரல் கொடு” என்றுதான் இந்திய அரசைக் கோருகிறார்கள்.

ஈழத்தில் நடப்பது இரு தரப்பினருக்கு இடையிலான போர் அல்ல. சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மை சிங்கள இனவெறி அரசு நடத்தும் படுகொலை.

19 ஆம் தேதியன்று உயர்நீதி மன்றத்தில் நடந்ததும் வக்கீல்-போலீசு மோதல் அல்ல. வழக்குரைஞர்களுக்கு எதிராக போலீசு நடத்திய கொலைவெறித் தாக்குதல்.

சிதம்பரத்தில் நடந்ததும் தீட்சிதர்சிவனடியார் மோதல் அல்ல. தமிழ் மக்களுக்கு எதிராகத் தீட்சிதர்கள் தொடுத்துவரும் பார்ப்பனியத் தாக்குதல்.

கம்யூனிஸ்டுகளான ... வினர் போன்ற வெளியாட்கள் ஆத்திகர் பிரச்சினையில் தலையிடக் கூடாது என்கிறார்கள் தீட்சிதர்கள். ஆனால்ஹார்வர்டு சு.சாமி’ தில்லைவாழ் அந்தணர் சார்பாக வழக்கில் தலையிடுகிறார்.

“இலங்கைத் தமிழர் பிரச்சினையை பிரபாகரன் பார்த்துக் கொள்வார். அதில் நாம் தலையிட அவசியமில்லை” என்கிறார் விஜயன். ஆனால் சுப்பிரமணிய சாமி பிரச்சினையில் விஜயன் தலையிடுகிறாரே – அது எப்படி?

அது அப்படித்தான். எப்படியென்றால், சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான். இருந்தாலும் சில விஜயன், சு.சாமி மாதிரி சில பேர் மட்டும் கொஞ்சம் அதிகமாகச் சமம்.

தனது கட்டுரைக்கு பொருத்தமாகத்தான் தலைப்பிட்டிருக்கிறார் விஜயன்சத்யமேவ ஜெயதே…! ராமலிங்க ராஜு வழங்கும்சத்யம்’ மாதிரி இது விஜயன் வழங்கும் சத்யம் போலும்!

தோழர் மருதையன்
பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு. 
நன்றி: வினவு வழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி !

உண்டியலை எடு! தில்லை தீட்சிதர்கள் ஊர்த்வ தாண்டவம்!

பிப்ரவரி 6, 2009

மார்ச்-2, 2008 தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறியது.

பிப்ரவரி-2, 2009 தில்லைவாழ் அந்தணர்களின் இடுப்பிலிருந்து சிதம்பரம் கோயிலின் சாவிக் கொத்து இறங்கியது. நாம் நினைவில் வைத்துக் கொள்ளத் தோதாக இரண்டு முக்கியமான நிகழ்வுகளும் 2ம் தேதியிலேயே நடக்கும் படியாக செய்திருக்கிறான் இறைவன். எல்லாம் அந்த ஆடல்வல்லானின் திருவருள்!

தீட்சிதர்களிடமிருந்து கோயிலின் நிர்வாகத்தை இந்து அறநிலைய ஆட்சித் துறையின் கைகளுக்கு மாற்றும் தீர்ப்பை வழங்கியவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி. ஏற்கெனவே ஸ்வாமி பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர் இவர்தான் என்பது இங்கே நினைவுகூறத்தக்கது. தீர்ப்பு கிடைத்த ஒரு வாரத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

என்ன ஆச்சரியம்! 2 ம் தேதி இரவே கோயிலின் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள அரசாங்கம் முடிவெடுத்துவிட்டது. 3 ம் தேதி விடியும் வரை தள்ளிப்போட்டால் அதற்குள் தீட்சிதர்கள் ஒரு ஸ்டே ஆர்டரை வாங்கிக் கொண்டு வந்து விடுவார்களோ என்று அரசாங்கத்துக்கு பயம்! அவாள் மேட்டர் என்றால் கோர்ட் கதவுகள் அர்த்த ராத்திரியிலும் திறக்குமே! சங்கர ராமனைப் போட்ட சங்கராச்சார்ய ஸ்வாமிகளுக்காக ஸண்டே யில் ஸிட்டிங் போடவில்லையா சென்னை உயர்நீதிமன்றம்!

ஆனபடியினாலே, 2 ம் தேதி ராத்திரி 8.30 க்கெல்லாம் அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி கோயில் வாசலில் ஆஜராகி விட்டார். ஆனால் அதற்கு முன்னமே நமது தோழர்கள் கோயில் வாசலில் வெடி வெடித்து மக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று வஜ்ரா வேன், ஸ்டிரைகிங் போர்ஸ், வெள்ளை வண்டி, நீல வண்டி என ஒரு போலீசு பெரும்படை கோயிலை சுற்றி வளைத்தது. மொத்தம் சுமார் 600 போலீசார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் சாவியை தீட்சிதர்கள் E.O கையில் கொடுக்கவேண்டும். அதை வாங்கிக் கொடுக்கத்தான் இத்தனை ஏற்பாடு.

“எங்களுக்கு ஆர்டர் காப்பி வரவில்லை” என்று வாதாடினார் தீட்சிதர்களின் வக்கீல். “இந்த ஆர்டர் காப்பியை நீங்கள் வாங்காவிட்டால் கோயில் கதவில் ஒட்டிவிட்டு அடுத்த ஆக வேண்டியதைப் பார்ப்போம்” என்றார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். சாவி கைமாறியது.

மறுநாள் காலை செஞ்சட்டை அணிந்த தோழர்கள் கோயில் வாசலில் திரண்டிருந்தனர். கூட சிவனடியார் ஆறுமுகசாமி. காவலுக்கு வந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி நரேந்திரன் நாயர் “சிவப்பு சட்டை போட்டவங்கள்லாம் கோயிலுக்குள் போகக்கூடாது” என்று தடுத்திருக்கிறார். “அப்படி எந்த சட்டத்தில் இருக்கிறது?” என்று கேட்டிருக்கிறார்கள் தோழர்கள். போலீசிடம் போய் சட்டம் பேசலாமா? உடனே தகராறு. அனைவரும் கைது. முழக்கங்கள்… வாசலில் காத்திருந்த டி.வி காமெராக்கள் எல்லாவற்றையும் படம் பிடிக்கவே, உடனே அனைவரையும் விடுவித்தார் ஏ.எஸ்.பி.

“யாரும் வெடி வெடிக்க கூடாது” என்று அடுத்த உத்தரவைப் பிரகடனம் செய்தார் ஏ.எஸ்.பி. “இந்த வழக்கை நடத்தியது நாங்கள். 20 ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தை காதைப்பிடித்து இழுத்து வந்து நீதிமன்றத்தில் பேச வைத்தது நாங்கள். இன்று இந்து அறநிலையத்துறையின் கையில் சாவியை வாங்கிக் கொடுத்திருப்பது நாங்கள். இது எங்கள் வெற்றி. அதை நாங்கள் கொண்டாடுவோம். நீங்கள் யார் கேட்பதற்கு?” என்று முகத்தில் அடித்தாற்போலக் கேட்டார் வழக்குரைஞர் ராஜு (மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்)

“எனக்கு அதைப்பத்தியெல்லாம் தெரியாது. லா அண்டு ஆர்டர்தான் என்னுடைய பிரச்சினை” என்றார் ஏ.எஸ்.பி.

” லா அண்டு ஆர்டரை சிதம்பரம் போலீசு பாதுகாக்கும் லட்சணம் எங்களுக்கு தெரியும். எவனாவது சொம்பு திருடினால் முட்டியை உடைப்பீர்கள். அம்மன் தாலியை தீட்சிதர்கள் திருடி விட்டதாக ஒரு தீட்சிதரே புகார் கொடுத்திருக்கிறார். கைது செய்திருக்கிறீர்களா? திருட்டு, விபச்சாரம், கொலை என்று எத்தனை வழக்குகள் தீட்சிதர்களுக்கு எதிராக இருக்கின்றன, ஒரு வழக்கையாவது சிதம்பரம் போலீசு நடத்தியிருக்கிறதா? உங்களுக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் நாங்கள் வழக்கு போட்டிருக்கிறோம். அதுவாவது உங்களுக்கு தெரியுமா? வெடி வெடிப்பதுதான் லா அண்டு ஆர்டர் பிரச்சினையா?” என்று வெடித்தார் ராஜு.

இதற்கு மேல் ஒரு போலீசு அதிகாரி பேச வேண்டிய வசனத்தை பேசினார் ஏ.எஸ்.பி. “வெடித்தால் கைது செய்வேன்”

“கோயில் வாசலில் நானே வெடியைக் கொளுத்துகிறேன். முடிந்தால் கைது செய்யுங்கள்” என்றார் ராஜூ.

“கோயிலுக்கு உள்ள்ளே வெடிச்சா அர்ர்ரஸ்டு பண்ணுவேன்னு சொன்னேன்” என்று உறுமி ஜகா வாங்கினார் ஏ.எஸ்.பி வடிவேலு.

வெடிகள் முழங்கின. கோயில் வாசலில் நின்று கொண்டிருந்த சிவனடியார் ஆறுமுகசாமியின் காலில் விழுந்து திருநீறு வாங்கினார்கள் பக்தர்கள் “மலையைப் புரட்டிட்டீங்க சாமி” என்று அவரைப் பாராட்டினார்கள்.

“எதுவும் என் செயல் அல்ல, எல்லாம் இந்த ம.க.இ.க கட்சி தோழர்கள், வக்கீலு தம்பி அவுங்கதான் செஞ்சது” என்றார் சிவனடியார்.

“எல்லாம் அவன் செயல்” என்ற வசனத்தை அல்லவா சிவனடியார் பேசியிருக்க வேண்டும். பேசவில்லையே, இதுவும் அவன் செயலோ!

தீட்சிதப் பார்ப்பனர்களின் ஆயிரமாண்டு ஆதிக்கத்தை வீழ்த்தி ஆலயத்தை அறநிலையத்துறையின் கையில் ஒப்படைத்திருப்பது அவனும் அல்ல, சிவனும் அல்ல, எவனும் அல்ல… அது ம.க.இ.க வும் அதன் தோழமை அமைப்புகளும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்களும்தான் என்பதை இந்து அறநிலையத்துறையின் அதிகாரிகள் அனைவரும் அறிவார்கள். இதற்காக நூறு முறை அவர்கள் நன்றியும் கூறிவிட்டார்கள்.

ஒரு பத்தாண்டுகள் பின்னே போவோம். 1997 – அதுவும் கலைஞர் ஆட்சிதான். அப்போது இதே சிதம்பரம் கோயிலில் அறநிலையத்துறையின் அதிகாரி நியமிக்கப்பட்டார். கோயிலுக்கு உள்ளே போய் அறிவிப்புப் பலகையை மாட்டினார் அந்த நிர்வாக அதிகாரி. அடுத்த கணமே அந்தப் பலகையை உடைத்தெறிந்து அவரையும் விரட்டினார்கள் தீட்சிதர்கள். அந்த அப்பாவி அதிகாரி மிகுந்த நம்பிக்கையுடன் காவல் நிலையத்திற்குச் சென்று 3 தீட்சிதர்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் கொடுத்தார். தீட்சிதர்களைக் கைது செய்ய போலீசு மறுத்துவிட்டது.

அதன்பின் சட்டமன்றத்தில் காங்கிரசு கட்சியின் “சூத்திர” எம்.எல்.ஏ அழகிரி தீட்சிதர்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார். “தீட்சிதர்கள் கோயிலைத் தவிர வருமானத்துக்கு வேறு வழியில்லாத ஏழைகள். அவர்கள் மீது அரசு கருணை காட்டவேண்டும்” என்று கோரினார். கோயிலை அறநிலையத்துறை மேற்கொள்ளும் முயற்சி அத்தோடு கைவிடப்பட்டது. தீட்சிதர்களின் மீது அறநிலையத்துறை அதிகாரி கொடுத்த புகாரை “விவரப் பிழை” (mistake of fact) என்று கூறி கிழித்தெறிந்த்து போலீசு.

அதே தீட்சிதர்கள். அதே திமுக ஆட்சி.

இதோ, தில்லைக் கோயிலின் உள்ளே நிர்வாக அதிகாரியின் அலுவலகம் தயாராகி விட்டது. அடையாளமாக பக்தர்களிடமிருந்து காணிக்கைகளை வாங்கத் தொடங்கினார் அறநிலையத் துறையின் நிர்வாக அதிகாரி. சிறிது நேரத்தில் சேர்ந்த தொகை சில ஆயிரங்கள். 2007 ம் ஆண்டு மூழுவதும் தில்லை நடராசர் கோயிலுக்கு பக்தர்கள் மூலம் வந்த காணிக்கை என்று தீட்சிதர்கள் கொடுத்திருக்கும் கணக்கு என்ன தெரியுமா? 2007 ம் ஆண்டின் மொத்த காணிக்கை வரவு ரூ. 37,199. செலவு 37,000. கையிருப்பு 199 ரூபாய்!

“பரமேஸ்வரன் ஆனந்த நடனம் ஆடறார் பாருங்கோ” என்று தமிழிலும், “தி காஸ்மிக் டான்ஸ் ஆப் லார்டு ஷிவா” என்று ஆங்கிலத்திலும், இன்னும் எல்லா உலக மொழிகளிலும் வருசம் பூரா பேசி தீட்சிதர்கள் வசூலித்த தொகை வெறும் 37,199 ரூபாய்தானாம். அதாவது தினமொன்றுக்கு 100 ரூபாய். நடைபாதை பிள்ளையார் கூட உட்கார்ந்த இடத்தில் 400, 500 வசூல் பண்ணுகிறார். நம்ம நடராசப் பெருமானோ நாள் முழுவதும் டான்ஸ் ஆடுகிறார். இருந்தாலும் தினசரி வசூல் நூறு ரூபாய்தான் என்றால் நம்ப முடிகிறதா?

உண்டியலே இல்லாத தில்லைப் பெருங்கோயிலில் நேற்று உண்டியலை வைத்து விட்டது அறநிலையத்துறை. “நடராசனை எடுத்திருந்தால் கூட ஏதாவது பரிகாரம் செய்து கொள்ளலாம். உண்டியலை வைத்துவிட்டால் இதற்கு வேறு பரிகாரமே இல்லையே” என்று பதறியிருக்கிறார்கள் தீட்சிதர்கள்.

“உண்டியல் வைக்கணும்னு கோர்ட் ஆர்டர்ல இல்லை” என்று ஆட்சேபித்திருக்கிறார்கள் தீட்சிதர்களின் வக்கீல்கள்.

“கோயில் வரவு செலவுக்கு இனி நான்தான் பொறுப்பு. உண்டியல் வைப்பது எங்க அதிகாரம். எந்த இடத்தில் வைக்கலாம்னு வேணா நீங்க சொல்ல்லாம்” என்றிருக்கிறார் நிர்வாக அதிகாரி. “அப்டீன்னா இங்க வைங்க” என்று இடம் காட்டினாராம் ஒரு தீட்சிதர். “நாங்க வைக்கவே கூடாதுங்குறோம். நீ எதுக்குடா எடம் காட்றே?” என்று சொல்லி அந்த தீட்சிதரை காட்டு காட்டுன்னு காட்டியிருக்கிறார்கள் சக தீட்சிதர்கள்.

கும்மிருட்டாக இருக்கும் கருவறையில் கற்பூரத்தைக் கொளுத்தி சிறிது நேரம் சாமியின் மூஞ்சிக்கு நேரே காட்டினால்தான் “இறைவனின் திருமுகத்தை” பக்தர்களால் பார்க்க முடியும். “கோயிலே நம்ம கைய விட்டு போயாச்சு. இந்த மூஞ்சிய பக்தன் பாத்தா என்ன, பாக்காட்டி என்ன” என்ற டென்சனில் தீட்சிதர்கள் ரெண்டு நாளாக சரியாக சூடம் காட்டுவதில்லையாம். உடனே பக்தர்கள் நிர்வாக அதிகாரியிடம் புகார். “சூடம் எரிந்து தீரும்வரை காட்டுங்கள்” என்று தீட்சிதர்களுக்கு உத்தரவிடுகிறார் நிர்வாக அதிகாரி.

நந்தனை எரித்த அந்தணர் குலத்தின் வாரிசுகள் இப்போது நெருப்பே இல்லாமல் எரிகிறார்கள்.

தில்லை மக்களுக்கோ உற்சாகம். தோடுடைய செவியன் காட்சி தருவதை நம்பமுடியாமல் கண்ணைக் கசக்கிவிட்டுக் கொண்ட அப்பரைப் போல, இந்தக் காட்சிகளையெல்லாம் நம்பமுடியாமல் கண்ணைக் கசக்கி விட்டுக்கொள்கிறார்கள் கோயிலுக்கு அடிக்கடி வந்த போகும் பக்தர்கள்.

தில்லைவாழ் அந்தணர்கள் இப்போது சென்னை வாழ் அந்தணர்கள், டெல்லி வாழ் அந்தணர்களாகிவிட்டார்கள். இந்த தீர்ப்புக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்திருக்கிறார்கள். வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

இங்கே முடியாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டுக்கும் போவார்கள். அமைச்சர்கள், பிரதமர்கள், ஜனாதிபதிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரையும் இந்நேரம் சந்தித்திருப்பார்கள். லாபி வேலை செய்யத் தொடங்கிவிட்டது.

இனி என்ன நடக்கும்? அப்பீல் ஜெயிக்குமா? அது எப்படி நமக்குத் தெரியும்? அதெல்லாம் அந்த ஆடல்வல்லானுக்குத்தான் வெளிச்சம். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் மறுபடியும் ஹை கோர்ட் படியேறத் தயாராகி விட்டார்கள். வழக்கு செலவுக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாயாக மக்களிடம் நிதி திரட்டும் பணியை மறுபடியும் தொடங்கி விட்டார்கள் எங்கள் தோழர்கள்.

இன்று காலை தினமணி இரண்டாம் பக்கத்தில் இருபுறமும் தீட்சிதர்கள் புடை சூழப் பத்திரிகைகளுக்குக் காட்சி கொடுத்திருக்கிறார் அன்னை ஜெயலலிதா.

“சிதம்பரம் ஆலய நிர்வாகத்தை அரசு ஏற்றுக் கொள்ள வற்புறுத்திய சிவனடியாரும் மற்றவர்களும் தீர்ப்பின் வெற்றியைக் கொண்டாட ஈ.வெ.ரா சிலைக்கு மாலை அணிவித்த்தில் இருந்தே அவர்களது உள்நோக்கம் தெளிவாகிறது” என்று சாடியிருக்கிறார் பா.ஜ.க மாநிலத்தலைவர் இல.கணேசன்.

“கோயிலை மீண்டும் தீட்சிதர்கள் கையில் ஒப்படைக்க பொதுநல வழக்கு போடுவேன்” என்று பொதுநலத் தொண்டர் சுப்பிரமணிய சாமி சாமியாடியிருக்கிறார்.

அடுத்த ராமர் பாலம் தொடங்கிவிட்டது?

நன்றி: வினவு உண்டியலை எடு! தில்லை தீட்சிதர்கள் ஊர்த்வ தாண்டவம்!


ஈழம்: நிலமா? மக்களா?

பிப்ரவரி 5, 2009

உயிருடன் இருக்கும் உடல்கள்

இருந்தும் இல்லாமல் இருக்கும், அரை சடலங்கள்

இல்லாமலும் இருக்கும் அரை உடல்கள்

உயிரற்ற சடலங்கள்

இதுதான், இது மட்டுமேதான் இன்றைய ஈழம்.

இன்று உடல்களுக்கு எந்த மதிப்பும், மரியாதையும் இல்லை. சில உடல்களுக்காக பல உடல்கள் அடக்கப்படுவதும், அழிக்கப்படுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதிகளாகிவிட்டன. இந்த அழிப்பு வேலையில் மதங்களும், ஆதிக்கங்களும் கை கோர்த்து ரத்தவெறிப் பிடித்து அலைகின்றன.

பல உடல்களின் ஆற்றல்உழைப்பு பிழிந்தெடுக்கப்பட்டு, சில உடல்களின் இன்பத்துக்கான பொருளாக மாறும்போது மதங்களும், மூலதனமும் ரத்தக் காட்டேரிகளாக பல்லிளிக்கின்றன.

முன்பு காலனியாதிக்கத்தின் மூலம் மனித உடலின் ஆற்றலை சுரண்டிய ஏகாதிபத்தியம், இன்று உள்நாட்டுப் போர்களை உருவாக்குவதன் மூலம் உடல்களை குறைக்கின்றன. காரணம், இப்போது இயற்கை வளங்களும், நிலப்பரப்புகளும் தேவைப்படும் அளவுக்கு உடல்கள் தேவைப்படுவதில்லை.

இந்த கொடூரமான முதலாளித்துவஏகாதிபத்திய சூழலில்தான் இந்தக் கேள்வி,

ஈழம்: நிலமா? மக்களா?

புலம் பெயர்ந்த, புலம் பெயராத அனைத்து ஈழ மக்களும் இந்த வினாவைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிரபாகரனும், ‘இந்தக் கேள்விக்கு எப்படி விடையளிக்க வேண்டும்?’ என்று ஈழத்தமிழர்களின் சடலங்களை கையில் ஏந்தியபடி அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், இந்தியாவையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அவரால் சுயமாக செயல்பட முடியாது. அமெரிக்கஇந்திய கைப்பாவையாக மாறி மாறி இருந்தே பிரபாகரனுக்கு பழகிவிட்டது. அதனால்தான் ஏகாதிபத்தியம் போலவே அவருக்கும் மனிதர்கள் கண்களுக்கு தெரியவில்லை. அனைவரும் உடல்களாக, சடலங்களாகவே காட்சியளிக்கிறார்கள்.

புரட்சிகர நடவடிக்கைகளோ, மார்க்சியலெனினிய சித்தாந்த அறிவோ அவருக்கு இருந்திருந்தால் இப்படி உடல்களை, சடலங்களை ஏந்தியபடி நின்றுக் கொண்டிருக்க மாட்டார். மக்களை ஒன்றுதிரட்டி மூன்றாம் உலக நாடுகளிலுள்ள புரட்சிகர அமைப்புகளின் துணையுடன் ஒட்டுமொத்த ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து நின்றிருப்பார். ஆனால்

பிரபாகரனும் கேட்கத்தான் செய்கிறார், ஈழம்: நிலமா? மக்களா?

ஆனால், எத்தனை ஈழத்தமிழர்களின் சடலங்கள், உடல்கள் விழுந்தாலும், இந்தக் கேள்விக்கு அமெரிக்காவோ, இந்தியாவோ பதில் சொல்லாது. இதை பிரபாகரன் உணர்ந்தாராஉணரும்படி அருகில் இருப்பவர்கள் சொன்னார்களா, சொல்வார்களா என்று தெரியவில்லை. அப்படியே சொன்னாலும் சர்வாதிகாரத்துடன் இருக்கும் பிரபாகரன் அதை கேட்பாரா என்பதும் சந்தேகம்தான்.

நடந்து கொண்டிருப்பது சிங்களதமிழர் இடையிலான யுத்தம் அல்ல. தெற்காசிய வல்லரசாக நினைக்கும் இந்தியாவுக்கும், ஈழத்தின் சர்வாதிகார அமைப்பாக இருக்கும் புலிகளுக்குமான போர் இது.

நடுவில் உதிர்ந்துக் கொண்டிருக்கின்றன ஈழத் தமிழர்களின் உடல்கள்

தெற்காசிய வல்லரசாக மாறத் துடிக்கும் இந்தியாவுக்கு, ஈழ நிலப்பரப்பு, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை இருக்கிறது.

அதற்கு ஈழத் தமிழர்களின் உடல்கள் தடைகளாக இருக்கின்றன

இலங்கை கடற்படைக்குள் பாகிஸ்தான், சீனா போன்ற இந்திய அண்டை நாடுகளின் உளவுப் பிரிவினர் ஊடுருவியிருக்கிறார்கள் என்று இந்தியா நியாயம் சொல்லக் கூடும். அதற்கு வலு சேர்ப்பது போல் பாகிஸ்தான் உளவுத்துறைத் தலைவரான பஷீர்வாலி முகமது இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். கொழும்புதூத்துக்குடிகன்னியாகுமரி என முக்கோண கடல் பகுதியை அமைக்கப் போவது இந்தியாவா, பாகிஸ்தானா, சீனாவா என்பதுதான் இப்போது தெற்காசிய ஆளும் வர்க்கங்களின் முன்னால் உள்ள கேள்வி.

இதற்கு மீனவர்களின் உடல்கள் தடையாக இருக்கின்றன

உண்மையில் இந்திய ஆளும் வர்க்கம் இப்போது பயப்படுவது பாகிஸ்தானை பார்த்து அல்ல. சீனாவை பார்த்து. காரணம், இந்தியாவை சுற்றியுள்ள எல்லா அண்டை நாடுகளிலும் சீனா வலுவாக கால்பதித்திருக்கிறது. பர்மாவிலும், பாகிஸ்தானிலும் கடற்படைத்தளமாக பயன்படுத்த வாய்ப்புள்ள துறைமுகங்கள் இன்று சீனாவின் வசம் இருக்கிறது. இதேபோல் இலங்கையிலும் அது மாதிரியான துறைமுகத்தை கட்ட சீனா முயற்சித்து வருகிறது.

இந்த இடத்தில் இந்துமகாக் கடலில் சீனா வலுவாக காலூன்றி இருப்பதை நினைவில் கொள்வது இந்திய ஆளும் வர்க்கத்தை புரிந்து கொள்ள வழிவகுக்கும். இதுதவிர, எண்ணெய் ஆய்வு என்ற பெயரில் சேது சமுத்திர பகுதியிலும் காலூன்ற சீனா முயற்சிக்கிறது. இதற்கு இலங்கை அரசும் ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதெல்லாம் இந்திய ஆளும் வர்க்கத்தின் பக்கம் இருக்கும்நியாயங்கள்!’

இந்த நியாயத்துக்காக, அநியாயமாக ஈழத்தமிழர்கள் சடலங்களாகிக் கொண்டிருக்கிறார்கள்

ஆனால், சீனா இப்படி இந்தியாவை சுற்றி வளைத்திருப்பதுப் போல், தைவான், கொரியா, வியட்நாம் போன்ற சீனாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளிலோ, பசிபிக் கடல் பகுதியிலோ இந்தியாவுக்கு ஒரு தளமும் இல்லை. இனிமேல் அப்படி ஒரு தளம் அமைப்பதற்கான வாய்ப்பும் குறைவு 

அதனால்தான் ஈழ நிலப்பரப்பில் வளர்ந்திருக்கும் உடல்கள் வெட்டப்படுகின்றன…  

சீனாவின் ஆதிக்கத்தை  இந்திய ஆளும் வர்க்கம் மட்டுமல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியமும் கவலையுடன் பார்க்கிறது. சீனாவும் தெற்காசிய வல்லரசாக மாறக் கூடாது. இந்தியாவும் வரக் கூடாது. தான் மட்டுமே என்றும் நாட்டாமையாக இருக்க வேண்டும் என அமெரிக்க ஏகாதிபத்தியம் திட்டம் போடுகிறது. அதற்கேற்ப்ப காய் நகர்த்தியும் வருகிறது.

இப்படியிருக்கையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதான ராஜதந்திரத்தைமனதில் கொண்டு பிரபாகரன் நகர்ந்தால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியை நாடினால், அது ஈழத்தை விலை போட்டு விற்பதாகவே அமையும்.

காரணம், மூன்றாம் உலகத்தின் உடல் அழிப்பு இயந்திரமாக இருப்பதே அமெரிக்க ஏகாதிபத்தியம்தான்  

கெரில்லா பயிற்சிகளில் விடுதலைப் புலிகள் கைதேர்ந்தவர்கள் என்பதும் அதற்கு பல்லாயிரம் போராளிகள் அவசியமில்லை, விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே போதுமானது என்பதையும் பிரபாகரனைவிட, அமெரிக்கா நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது.
அதுமட்டுமல்ல, இப்போது நடைபெற்று வரும் யுத்தத்தில் கொல்லப்பட்ட போராளிகளில் பெருமளவினர் புதிதாக விரும்பியோ விரும்பாமலோ விடுதலைப் புலிகளில் இணைக்கப்பட்டவர்கள் என்றும் முறையான பயிற்சி பெற்ற புலிகளின் பலமான பிரிவினரிடையே பாரிய இழப்புகள் பெருமளவில் ஏற்படவில்லை என்றும் ராஜ பக் ஷேவை விட அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும்.
அதனால்தான் அழகான திட்டத்தை அமெரிக்க வகுத்து காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.
ஹமாஸ் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளால் இஸ்ரேலை எதிர்கொள்ள முடியவில்லை. தலிபானால் அமெரிக்க மற்றும் நேசநாட்டு படைகளை எதிர்கொள்ள முடியவில்லை. அதேசமயம் இஸ்ரேலாலும் அமெரிக்காவாலும் யுத்தத்தை வெல்லவும் முடியவில்லை. ந்த அமைப்பை அப்படியே ஈழத்தில் பொருத்தி வைப்பதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டம்.
இன்னுமொரு ஆப்கானிஸ்தானையும், இன்னுமொரு ஈராக்கையும் இலங்கையில் உருவாக்குவதே ஏகாதிபத்தியத்தின் லட்சியம்.
 
அப்போதுதான் உடல்களின் எண்ணிக்கை குறையும். பரந்த நிலப்பரப்பும், கனிமஎண்ணெய் வளங்களும் கிடைக்கும்.
அதனால் உயிர்கள் சடலங்களாகுவது குறித்து எந்த ஆளும் வர்க்கத்துக்கும் கவலையில்லை.
கவலைப்படும் வர்க்கங்கள் பிரபாகரனுக்கு அவசியமும் இல்லை.
நசுங்கிக் கொண்டிருக்கின்றன ஈழத் தமிழர்களின் சடலங்கள்
ஆமாம், ஈழம்: நிலமா? மக்களா?

ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி? – சே.பாக்கியராசன்

பிப்ரவரி 4, 2009

சமீபத்தில் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தான் இரண்டுமுறை ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்திருக்கிறேன், மூன்றாவது முறையும் இழக்கத் தயார் என்று கூறி உள்ளார்.

பல முறை தன் ஆட்சி பறிக்கப்பட்டதைப் பற்றி கருணாநிதி புலம்பியதுண்டு, ஆனால் இம்முறை ஈழத்தமிழர்களுகாக ஆட்சியை இழந்தேன் என்று கூறியதால் அதைப் பற்றி அலச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

1977:

முதன்முதலில் ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி திமுக ஆட்சி, கருணாநிதி இரண்டாம் முறையாக முதல்வராக இருந்தபொழுது நடுவண் அரசான காங்கிரசினால் கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கபடுகிறது. அதற்கு அடுத்த நாளே திமுகவின் செயற்குழுவைக் கூட்டி கலைஞர் தலைமையில்ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று கூறி சர்வாதிகார கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானாஎன்று தீர்மானம் நிறைவேற்றபடுகிறது. பிரதமர் இந்திரா மிகவும் கோபம் கொள்கிறார். மேல் சபையில் நடந்த ஒரு விவாதத்தில்இந்தியாவின் கட்டுபாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாய்அறிவிக்கும் அளவிற்கு திமுகவின் ஆட்சியின் மீது கடுமையாகிறார். இதை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி அப்போதைய கவர்னர், ஆட்சியைப் பற்றி நல்லவிதமாய் எடுத்துக்கூறிய பிறகும் 31 ஆம் ஜனாதிபதி ஆட்சியை கலைக்கிறார்.

இதற்கு நடுவே எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டு புதிய கட்சி ஆரம்பித்து, 1973யில் திண்டுக்கல் இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுகிறது. 1973 ஆம் ஆண்டே எம்.ஜி.ஆர் திமுக அமைச்சரவை மீதான 54 ஊழல் புகார்களைக் கொண்ட பட்டியலை மத்திய அரசிடம் அளித்தார். அதன் அடிப்படையிலும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்சி கலைக்கபட்டது. மிசாவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் மரணமடைந்தார்கள்.

திமுக ஆட்சி கலைக்கப்பட்டபின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன், அதிமுக கூட்டணி கண்டது. 1977 மார்ச் மாதம் நடந்த அத்தேர்தலில் பிற மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றாலும் தமிழ்நாட்டில் மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அதற்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் இந்திரா காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து விலகிய பின்னும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதே 1977யில் வென்றார்.

72-இல் இருந்து 77-க்குள் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த இராஜாஜி, பெரியார், காமராசர் ஆகிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள். தமிழக அரசியலில் அவர்கள் இடத்தை இட்டு நிரப்ப அவர்கள் அளவிற்குத் தகுதி பெற்ற தலைவர்கள் இல்லை. அந்த வேளையில் எம்.ஜி.ஆரா கருணாநிதியா என்ற கேள்விதான் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. மக்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. அதே ஆண்டு அங்கேயும் தேர்தல் நடந்தது, தனி நாடுதான் தீர்வு என்று கூறி அமிர்தலிங்கம் தலைமையில் இருந்தஒருங்கிணைந்த தமிழர் விடுதலை முன்னணிபெருவாரியாக வெற்றிபெற்றது. இதுதான் நடந்தது. இதில் எங்கே ஈழப்பிரச்சனை வந்தது? இதில் எந்த இடத்தில் கருணாநிதி ஈழபிரச்சனைக்குப் பாடுபட்டார், குரல் கொடுத்தார் ஆட்சி இழந்தார் என்பதை நாம் அறிய முடியவில்லை?

1983 ஆம் ஆண்டு தான் இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை அவராகவே ராஜினாமா செய்தார். அப்பொழுது வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது, எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபை கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பாராமுகாய் இருந்துவிட்டது, இப்பொழுது நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறதுஎன்று குற்றஞ்சாட்டி ராஜினாமா செய்தார். ஆனால் அடுத்த வருடத்திலேயே மேல்சபைக்கு போட்டியிட்டு மேல்சபை உறுப்பினராகிவிட்டார். அதற்குப் பின் 1979 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதே காங்கிரசுடன் கூட்டணி கண்டு போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற பின் அனைத்து இடங்களையும் தோற்ற எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி துணையுடன் கலைத்தார் கலைஞர். ஆனால் முன்னைவிட அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வரானார்.

1991:

1991 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி 30 ஆம் தேதியில் மூன்றாம் முறையாக முதல்வரான கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஜானகி அம்மாள் முதலமைச்சரானார். 24 நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. பிளவுபட்ட அதிமுக தேர்தலை சந்தித்து, அதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் போபர்ஸ் ஊழல் முக்கியமான பங்கு வகித்தது.

கருணாநிதி வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணியில் இருந்தார். அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி போட்டு அனைத்து இடங்களிலும் வென்றன. தமிழகத்தில் ஒரு இடத்தைக் கூட தேசியமுன்னணி பெறவில்லை. வடமாநிலத்தில் பல இடங்களில் வெற்றி பெற்றதால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது வி.பி.சிங் பிரதமரானார். மண்டல் கமிசன் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியதால் ஆன அரசியல் மாற்றத்தில் காங்கிரஸ் பின்னணியில் சந்திரசேகர் 54 எம்.பி.க்களோடு வெளியேறியதால் வி.பி.சிங் ராஜினாமா செய்தார். சந்திரசேகர் பிரதமரானார். வி.பி.சிங்குடன் நெருக்கமாய் இருந்த திமுக ஆட்சியை ராஜிவ் காந்தியின் ஆசியோடு ஜெயலலிதாவிற்காக சந்திரசேகர் கலைத்தார். அதற்கு அவர் சொன்ன பல காரணங்களில் ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதுதான். அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் எதற்காக ஆட்சி கலைக்கபட்டதென்று… மேற்சொன்ன காரணம் உண்மையா பொய்யா என்றுஏனெனில் விடுதலைப்புலிகள் அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அல்லர்.

ஆக 1980 ஆம் அண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி உதவியோடு கலைஞர் கலைத்ததற்கு என்ன காரணங்களோ அதே காரணங்கள் தான் அவர் ஆட்சி 1991 ஆம் ஆண்டு ராஜிவின் உதவியோடு ஜெயலலிதா கலைஞர் ஆட்சியைக் கலைத்ததற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல்.. அதிகார மாற்றங்கள்.. கூட்டணி மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் எந்த ஆட்சியும் பறிக்கப்படவில்லை என்பதே வரலாறு. இனிமேலும் கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தேன் என்று கூறுவதை தமிழ்கூறும் நல்லுலகம் நம்பக்கூடாது.

இக்கட்டுரையின் நோக்கமே ஈழத்தமிழர்கள் ஆதரவு இப்பொழுதுதான் தமிழகத்தில் பல வருடங்கள் கழித்து எழுந்துள்ளது. அந்த எழுச்சியானது இதைப் போன்ற பொய்யுரைகளினால் இம்மியளவும் நலிந்துவிடக் கூடாது என்பதாலும், தமிழகத்தின் சில முக்கியமான அரசியல் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதாலும் தான்.

நன்றி

: கீற்று 

http://www.keetru.com/literature/essays/packiyarasan.php


ரவி சீனிவாஸ் – க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 4

பிப்ரவரி 3, 2009

புதிய ஜனநாயகம் ஜனவரி 2009 இதழில், தோழர் சுடர் எழுதிய கட்டுரைக்கு ரவி சீனிவாஸ் எதிர்வினை புரிந்திருக்கிறார். அதற்கான மறுப்புக் கட்டுரையின் இறுதிப் பகுதி இது. முந்தைய மூன்று பகுதிகள்   

ரவி சீனிவாஸ்க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 1 

ரவி சீனிவாஸ்க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 2 

ரவி சீனிவாஸ்க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 3

ஏகாதிபத்தியத்தின் சதியே பசுமைப் புரட்சியின் உருவாக்கம், என்பதை 3 பகுதிகளிலும் பார்த்தோம். ஆனால், ரவி இதை ஒப்புக் கொள்ளமாட்டார். ஏனெனில் அவரது எண்ணமும், உருவாக்கமுமே பார்ப்பன, பாசிசமாக இருக்கிறது. அதனால்தான் தனது எதிர்வினையில்புதிய ஜனநாயகம் / புதிய கலாச்சாரம் தோழர்களுக்கு, எதுவுமே தெரியாதுதகவல்களை இரவல் வாங்கி, பொய்களை கலந்து எழுதுவதே இவர்களுக்கு வாடிக்கை…’ என்று, கீ போர்டு கூசாமல் அவரால் அடிக்க முடிகிறது.

//தகவல்களை இரவல் வாங்கி பொய்களை கலந்து எழுதும் கும்பலுக்கு பசுமைப் புரட்சியின் வரலாறும் தெரியாது, அதன் விமர்சனத்தின் வரலாறும் தெரியாது.//

ஏன் ரவி, நீங்கள் மட்டும்தான் மெத்த படித்தவர்தோழர்கள் படிக்காதவர்கள்ஆராய்ந்து பார்க்காமல் குருட்டாம் போக்கில் அனைத்தையும் எதிர்ப்பவர்கள் என்று நினைக்கிறீர்களா? தப்பு ரவி. தன்னை மட்டுமே உயர்வாக எண்ணுவதும், மற்றவர்கள் அனைவரும் முட்டாள்கள், பொய்யர்கள், விவரம் அறியாதவர்கள் என எண்ணுவதற்கும் பெயர்தான் பார்ப்பனியம், பாசிசம்.

நீண்டகால செயல் திட்டத்துடன், மக்கள் திரள் அமைப்பைக் கட்டி, அமைத்து புரட்சிக்கு திட்டமிடும் தோழர்கள், ஒன்றும் தெரியாத முட்டாள்களல்ல. எதையும், எவரையும் எடுத்ததுமே நிராகரிப்பவர்களுமல்ல. ஏற்பதற்கு காரணங்களை முன் வைப்பது போலவே, விலக்குவதற்கான காரணங்களையும் பொதுவில் வைத்து உரையாடுபவர்கள்; உரையாட அழைப்பவர்கள். தங்களை மறுபரிசீலனை செய்ய என்றுமே தயங்காதவர்கள். அழித்தொழிப்பு, சாகசவாத செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்ட் அமைப்பினரை உரையாட தோழர்கள் அழைத்துக் கொண்டே இருப்பதே அதற்கு சாட்சி.

எதுவும் தெரியாமல், ஆனால், எல்லாம் தெரிந்தது போல் பேசக் கூடாது. பசுமைப் புரட்சியின் வன்முறை குறித்து தோழர்கள் மட்டுமல்ல, ‘ஜனநாயகத்தைநம்புபவர்கள் கூட உரையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், தோழர்களின் உரையாடலுக்கும், ‘ஜனநாயகவாதிகளின்உரையாடலுக்கும் வித்தியாசமிருக்கிறது. அந்த வேறுபாட்டை உணர்ந்தால்தான் தோழர் சுடரின் கட்டுரையை உங்களால் புரிந்து, உணர்ந்து கொள்ள முடியும். உதாரணமாக,

 //பசுமைப்புரட்சியை தமிழ்நாட்டில் மார்க்சிய வட்டாரங்களில் முதலில் விமர்சித்தது எஸ்.என்.நாகராஜன். இந்த விவாதங்கள் 1980களில் பரவலாக துவங்கின, அதிகம் வெளியே தெரிய வந்தன.அதில் முக்கிய பங்கு வகித்தது PPST குழு. நாகராஜன் பார்பனர், PPST குழுவிலும் பலர் பார்பனர்கள். அவர்கள் பசுமைப்புரட்சியை கேள்விக்குள்ளாகியவர்கள்.//

என்று எழுதியிருக்கிறீர்கள். இந்த 5 வாக்கியங்களுக்கு இடையில் சீழ் பிடித்துக் கிடக்கிறது உங்கள் சிந்தனை. நாகராஜன் பார்ப்பனர், PPST குழுவிலும் பலர் பார்ப்பனர்கள் என நீங்கள் ஏன் சுட்டிக் காட்டவேண்டும்? பார்ப்பனர்களுக்கு மட்டுமே சமுதாயசிந்தனை, அக்கறைஇருக்கிறது என சுட்டிக் காட்டவாஅல்லது வேறு எந்தவிஷயமும்கிடைக்காததால் காலம்தோறும் மகஇக தோழர்கள் மீது சுமத்தப்படுகிறதே குற்றச்சாட்டு… ‘பார்ப்பன தலைமைஎன்றுஅதை மனதில் வைத்து, ‘அவாளும் நம்மளவாதான்…’ என பல்லை இளிக்கிறீர்களா? முட்டாள்தனத்துக்கும், புறம்போக்குத்தனத்துக்கும், கடைந்தெடுத்த அயோக்கியத்தனதுக்கும் ஒரு அளவு இருக்கிறது ரவி

முன்பே சொன்னபடி, எஸ். என். நாகராஜன், ‘பாதுகாப்பான, சோம்பல் நிரம்பியபுரட்சிக்கு வித்திட்டவர்! ஒடுக்கப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும், காலம் காலமாக அடிமையாகவே வைத்திருக்கும் பார்ப்பன வைணவ சித்தாந்தத்தில்(?) மார்க்சியத்தை தரிசித்த கடைந்தெடுத்த பொறுக்கி. அவர், ‘பசுமைப் புரட்சியை எதிர்த்ததையும், தோழர்கள் எதிர்ப்பதையும் ஒன்று என கருதுகிறீர்களா?

முட்டாள். திருவரங்கம் ரங்கநாதர் சன்னிதியில் பாபாசாகேப் அம்பேத்கர் படத்தை வைத்து, வைணவத்தையே, வைணவ சித்தாந்தத்தையே அதிர வைத்த தோழர்களுக்கும், எஸ். என். நாகராஜனுக்கும் வித்தியாசமில்லை? ‘திண்ணை மார்க்சியத்துக்கும்‘; விவசாயிகள்தொழிலாளர்களுடன் ஒன்று கலந்து அமைப்பை கட்டி வரும் நடைமுறை மார்க்சியத்துக்கும்வித்தியாசம் உண்டு. இரண்டும் எதிர் எதிர் துருவங்கள். ஒரு பொறுக்கியுடன், தோழர்களை ஒப்பிட வேண்டாம்.

அப்புறம்,

//1983 ல் கிளாட் ஆல்வரிஸ் இந்த விவாதங்களை அப்போதிருந்த இல்லஸ்டேரட் வீக்லியில் எழுதிய கட்டுரை மூலம் பலர் அறியச் செய்தார்.//

என்று சொல்லியிருக்கிறீர்கள். ‘புதிய ஜனநாயகம்இதழ்களில் தோழர் ஆர். கே. இவரைக் குறித்து எழுதியது இருக்கட்டும். அதை சொன்னாலும் நீங்கள் ஏற்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக, இவருடன், அதாவது இவரிடம் பணிபுரிந்த, எஸ். வி. ராஜதுரை, இந்த கிளாட் ஆல்வரிஸ் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கிறீர்களா?

”…எனது பாதுகாப்பின் பொருட்டும், கொள்கைச் சமரசம் ஏதும் செய்து கொள்ளாமலும், அந்த (வடாற்காடு – தர்மபுரி பகுதிகளை குறிப்பிடுகிறார் – சூன்யம்) உண்மை அறியும் குழுவில் வந்திருந்த கோவாவைச் சேர்ந்த சமூகவியல் அறிஞரான கிளாட் ஆல்வாரெஸ் வழங்கிய ஆராய்ச்சித்துறை வேலையொன்றை ஏற்றுக் கொண்டேன்….

அந்த ஆராய்ச்சித்துறைப் பணிகளுக்கு வெளிநாட்டு நிதி உதவியும் கிடைத்து வந்ததை அச்சமயம் நான் அறிந்திருக்கவில்லை. அதை அறிந்துகொண்ட பிறகும் நான் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவதைத் தவறாக கருதவில்லை…”
(அழுத்தம் என்னுடையவை – சூன்யம்) ‘மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்… புலவர் கு. கலியபெருமாள் தன் வரலாறு’; பக்கம்: 31, செந்தீ பதிப்பகம், 80, முதன்மைச் சாலை, பெண்ணாடம் – 606105, திட்டக்குடி வட்டம், கடலூர்.

புரிகிறதா ரவிஇந்தஉண்மையைதோழர்கள் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் பொய், புரட்டு, பித்தலாட்டம், உண்மைக்கு மாறானது என முடிவுக்கு வந்திருப்பீர்கள். ஆனால், ‘பரிமாணம்வழியேநிகழுக்கு வந்த உங்களைப் போன்ற, ஒருதோழர்தான், சக பயணிதான், வெளிநாட்டு நிதி உதவியுடன் ஆராய்ச்சி செய்தவர் கிளாட் ஆல்வரிஸ் என்கிறார்!!

ஏன் ரவி, ஏகாதிபத்தியத்திடமே பணம் வாங்கிக் கொண்டு, அந்த ஏகாதிபத்தியத்தையே கிளாட் ஆல்வரிஸ் எதிர்த்திருப்பார் என்று நினைக்கிறீர்களா? தோழர்களையும் அதையே நம்பச் சொல்கிறீர்களா? ஆமாம், அதுதான் உண்மை என கீ போர்ட் அடித்து நீங்கள் சத்தியம் செய்யக் கூடும். காரணம், ‘வெள்ளைக் காக்கா பறக்கிறது என ஏகாதிபத்தியம் சொன்னால்நீங்களும் அதை நம்புவீர்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால், உங்களுக்கும்(!) படியளப்பவர்கள், அவர்கள்தானே!

சரி, விஷயத்துக்கு வருவோம். கிளாட் ஆல்வரிஸ் எழுதியஅறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை: நவீன மயதாலுக்கு எதிரான எழுச்சிஎன்ற நூலின் 46ம் பக்கத்தில், ‘பசுமைப் புரட்சியின் அரசியலும் பின் விளைவுகளும்என்னும் அத்தியாயம் இருக்கிறது. தோழர் சுடர் சுட்டிக்காட்டியதையேதான் கிளாட் ஆல்வரிஸும் சுட்டிக் காட்டுகிறார். ஆனால், இரண்டுக்கும் பின்னால் இருக்கும் நோக்கங்கள் வேறு வேறு. அது ஏகாதிபத்திய கைக்கூலிக்கும், புரட்சியாளருக்குமான வித்தியாசம்!

அதேபோல் ‘HOMO FABER: Technology and culture in India, China and the west, 1500 to the present Day’ (இந்த நூலின் மூன்றாம் பதிப்பு, Decolonizing History: technology and culture in India, China and the west, 1492 to the present day என்ற தலைப்பில் வெளியானது), மற்றும் ‘The Science, Development and Violence’ நூல்களைக் குறித்து வரிக்கு வரி உரையாட முடியும். அது இந்த எதிர்வினைக்கு அவசியம் இல்லை என நினைக்கிறேன். காரணம், நாம் உரையாடுவது பசுமைப் புரட்சியின் வன்முறை குறித்துதானே தவிர, கிளாட் ஆல்வரிஸ் குறித்து அல்ல.

HOMO FABER: Technology and culture in India, China and the west, 1500 to the present Day’ நூலைக் குறித்து, 1980ம் ஆண்டு டிசம்பர் ‘படிகள்’ இதழில் சிவராமன், ‘ஏகாதிபத்தியத்தின் பிடியில் இந்திய விஞ்ஞானம்’ என்ற தலைப்பில் விமர்சனம் செய்திருக்கிறார். அதையும் தோழர்கள் வாசித்திருக்கிறார்கள் ரவி!

உங்களுக்காக கிளாட் ஆல்வரிஸ் இணையதள முகவரியை தருகிறேன். ‘நேரம்கிடைக்கும்போதுமேய்ச்சல்செய்ய உதவும்!: http://www.typewriterguerilla.com/

பிறகு,

 //நம்மாழ்வாரை பற்றி எழுதியதுடன், இயற்கை வேளாண்மை குறித்து நூல் வெளியிட்டது நிகழ். கோவை ஞானி அதை செய்ய முக்கிய காரணி நாகராஜன். அப்போது புதிய ஜனநாயகம் எத்தனை கட்டுரைகளை இயற்கை வேளாண்மை குறித்து வெளியிட்டது என்பதை சுடர் எழுதுவாரா?//

என பொங்கி வெடித்திருக்கிறீர்கள். அடப் பாவமேஇவ்வளவு அப்பாவியாகவா இருக்கிறீர்கள்? உங்கள்ஆன்மிக குருஎஸ். என். நாகராஜன் சொல்ல, கோவை ஞானி, நம்மாழ்வார்குறித்துநூல் வெளியிட்டபோது, தோழர்கள் களத்தில் இறங்கி விவசாயிகளை பசுமைப் புரட்சிக்கு எதிராக ஒன்று திரட்டி அமைப்புக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அதாவதுசெயலில்இறங்கியிருந்தார்கள்.

‘மக்கள் கலை இலக்கிய கழகத்துக்கு’ அடுத்தபடியாக கட்டப்பட்ட அமைப்பு ‘விவசாயிகள் விடுதலை முன்னணி’தான். இது மாற்று அமைப்பினருக்கே தெரியும். இதற்கு பிறகுதான் ‘புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, ‘பெண்கள் விடுதலை முன்னணி’, ‘புதிய ஜனநாயக தொழிலாளார் முன்னணி’ (அமைப்புகள் தொடரும் ரவி… வெகுமக்கள் இயக்கம் நிற்காது!) ஆகிய மக்கள் திரள் அமைப்புகள் கட்டப்பட்டன.

இறுதியாக ரவி, ‘புதிய ஜனநாயகம்இதழின் முதலாமாண்டிலிருந்தே, ஏகாதிபத்தியபன்னாட்டு சதிகளுக்கு எதிரான விவசாய தகவல்களும், பசுமைப் புரட்சிக்கு எதிரான வன்முறை குறித்த கட்டுரைகளும் பிரசுரமாகிக் கொண்டுதான் இருந்தன. அவற்றை இங்கு பட்டியலிட ஆரம்பித்தால், பதிவு தாங்காது!

இத்தனைக்கும் அப்போது நீங்கள் கண்காணாத தூரத்திலோ, தொடர்பு எல்லைக்கு அப்பாலோ இல்லை. கோவையில், எஸ். என். நாகராஜனிடம், தீக்ஷை பெற்றுக் கொண்டிருந்தீர்கள்! ‘நிகழில்பல மொழி பெயர்ப்புகளை செய்து வந்தீர்கள்! எனவே உங்கள் தீக்ஷைகாலத்திலிருந்தே செயலில், களத்தில் தோழர்கள் இறங்கியிருந்தார்கள் என்பதை மறக்காதீர்கள்.

அலுப்பாக இருக்கிறது. ‘பசுமைப் புரட்சிசரியே என்று சொல்ல வரும் நீங்கள், ‘உரியதகவல்களை தந்திருந்தாலாவதுகெத்தாகஇருந்திருக்கும். இப்படியா சொதப்புவது? உங்களை இன்னமும்அறிவுஜீவியான வலதுசாரிஎன நம்புவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்! (ஆமாம் ரவி, இன்னமும் உங்களை நம்பிட்டு இருக்காங்க?!) அப்படியிருக்கும்போது, கொஞ்சமாவது அதற்கு ஏற்ப தகவல்களை தந்திருக்கலாமே? இப்படியா சாயம் வெளுத்துப் போகும்படி எழுதுவது!

சரி சரிவிட்டுத் தள்ளுங்கள். இப்போதும் ஒன்றும் குடி முழுகி விடவில்லை. எப்போதுமேநேரம்கிடைக்கும்போதுதான் உங்களால் உரையாட வர முடியும். அப்படி உங்களுக்கு கிடைக்கப் போகும் நேரத்துக்காககாத்திருக்கிறோம். அதுவரை எதிர்வினை, மறுப்புக்கு இடைவேளை!

வா ராசா வா.


தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!

பிப்ரவரி 2, 2009

ஒரு மாபெரும் வெற்றிச் செய்தி!

“தீட்சிதர் சொத்து அல்ல தில்லைக் கோயில்!
தில்லைக் கோயிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை
தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்!”

என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் எமது தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது. இன்று(02.02.09) மாலை 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.

இன்னும் ஒரு வார காலத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும், அதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி. பானுமதி. (பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனை வழங்கியவர்) ”தாங்கள் மேல்முறையீடு செய்ய உதவியாக, தீர்ப்பின் அமலாக்கத்தை 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்குமாறு தீட்சிதர்கள் கோரினர்”

“ஒரு நிமிடம் கூட நிறுத்தி வைக்க முடியாது” என்று மறுத்து விட்டார் நீதிபதி.

சுமார் 20 ஆண்டுகளாக உறங்கிக் கிடந்த இந்த வழக்குக்கு உயிர் கொடுத்து இந்த முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள்தான். “அர்ச்சகனின் உரிமை அல்ல, வழிபடுபவரின் உரிமைதான் முதன்மையானது” என்ற எமது வாதம்தான் இந்தத் தீர்ப்பின் அடிப்படையாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரிவான விவரங்களைப் பின்னர் தெரிவிக்கிறோம்.

யாரும் சாதிக்க இயலாது என்று கூறிய வெற்றியை எமது அமைப்புத் தோழர்கள் சாதித்திருக்கின்றனர்.  முதலில் சிற்றம்பல மேடையில் தமிழின் உரிமையை நிலைநாட்டினோம். இன்று கோயிலின் மீது தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்டியிருக்கிறோம். எம்முடைய விடாப்பிடியான போராட்டத்திற்கும், எமது தோழர்களின் கடும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி இது. ஈழத் தமிழர்களுக்காக முத்துக்குமார் தியாகம் செய்த இந்த காலத்தில், தமிழ் மக்களை தலைநிமிரச் செய்துள்ள இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த்து. தமிழுக்கென்று உயிரையும் கொடுப்போமென வெற்றுச் சவுடால் அடிக்கும் திராவிட, தமிழினவாதிகள் இத்தனை ஆண்டுகள் செய்ய முடியாத செயலை புரட்சிகரக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் செய்திருக்கிறோம். கம்பீரமாக இந்த வெற்றியை அனைவருக்கும் அறிவித்து கொண்டாடுமாறு தோழர்களையும், பதிவர்களையும், வாசகர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வெற்றிக்கு முன்பாக மனித உரிமை பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள பிரசுரத்தை தேவை கருதி இங்கே பதிவு செய்கிறோம்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

பல்லாயிரம் ஏக்கர் நிலமும், பல கோடி மதிப்புள்ள நகைகளும், பொன்னோடு வேய்ந்த கருவறையும் கொண்ட தில்லை நடராசர் கோயில், தீட்சிதர்களின் தனிச்சொத்தாக இருக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? மதுரை மீனாட்சியம்மன் கோயில் தொடங்கி பழனி, திருச்செந்தூர், உள்ளிட்ட தமிழகத்தின் பெருங்கோயில்கள் அனைத்தும் இந்து அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றன. ஆனால் தில்லைக் கோயிலை மட்டும் 300 தீட்சிதர் குடும்பங்கள் ஆண்டு அனுபவித்து வருகின்றனர்.

இந்தியாவில் எந்தக் கோயிலாக இருந்தாலும் மடாதிபதியாக இருந்தாலும் அவர்களைக் கணக்கு கேட்கும் அதிகாரமும் கண்காணிக்கும் அதிகாரமும் இந்து அறநிலையத்துறைக்குத உண்டு. தில்லைக்கோயில் தீட்சிதர்களின் தனிச்சொத்து அல்ல என்று 1888 இல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வழக்கிலேயே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் 1952 இல் பெற்ற ஒரு காலாவதியான தீர்ப்பை வைத்துக் கொண்டு, நீதிமன்றத்தை ஏமாற்றியும், அரசாங்கங்களை அவ்வப்போது சரிக்கட்டிக் கொண்டும் நடராசர் கோயிலையும் அதன் சொத்துகளையும் தீட்சிதர்கள் ஆண்டு அனுபவித்து வருகின்றனர்.

கோயிலில் அம்மனின் கழுத்தில் உள்ள தாலியையே காணவில்லை. கோயில் கலசத்தில் உள்ள தங்கத்தை சுர்டி விற்றுவிட்டார்கள். கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்த நகைகள் கணக்கில் வரவில்லை. தமிழகத்திலேயே இந்தக் கோயிலில் மட்டும்தான் உண்டியலே கிடையாது; பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை தீட்சிதர்களே தமக்குள் பங்கிட்டு எடுத்துக் கொள்கிறார்கள்..

கோயிலுக்குள் தீட்சிதர்கள் மது, மாது, அசைவ உணவு, காமக்களியாட்டங்கள், கிரிமினல் குற்றங்களை கேட்பாரின்றி நடத்துகிறார்கள். கோயிலுக்கு உள்ள ஜிம் வைத்திருக்கிறார்கள். இரவு 10 மணிக்கு கோயிலை இழுத்து மூடிவிட்டு அதனை விடுதியாக மாற்றி கும்மாளமடிக்கிறார்கள். தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கோயிலுக்கு உள்ளே நாய் வளர்க்கிறார்கள். காலையில் கோயிலுக்குள் நுழையும் பக்தர்கள் அங்கே இரைந்து கிடக்கும் பான்பராக் பாக்கெட்டுகளையும் சீமைச்சாராயப் புட்டிகளையும் பார்த்துப் பதறுகிறார்கள். இந்த அநீதிகளைத் தட்டிக் கேட்ட ஒரு தீட்சிதர் உள்ளிட்ட 3 பேர் கோயிலுக்குள் மர்ம்மான முறையில் இறந்திருக்கிறார்கள். தீட்சிதர்கள் மீது கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற புகார் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இவர்களுக்கு எதிராக இதுவரை மொத்தம் 15 கிரிமினல் வழக்குகள் சிதம்பரம் காவல்நிலையத்தில் இருக்கின்றன. திருட்டு, அடிதடி குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட தீட்சிதர்கள் இன்னுமும் ‘பகவானுக்கு’ பூசை செய்து கொண்டிருக்கிறார்கள். நகைத் திருட்டு தொடர்பாக தீட்சிதர்களே கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமே தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இத்தனைக்குப் பிறகும் அரசாங்கம் ஏன் தீட்சிதர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை, கோயிலின் நிரவாகத்தை அறநிலையத்துறை ஏன் எடுத்துக் கொள்ளவில்லை என்று நீங்கள் ஆச்சரியமடையலாம். இந்தக் கோயிலை அரசாங்கத்தால் ஏன் மேற்கொள்ள முடியவில்லை, தீட்சிதர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அதிசயம்தான். எனினும் இதுதான் உண்மை.

பல முறைகேடுகள் நடந்து, தீட்சிதரக்ளிலேயே ஒரு பிரிவினர் இந்த அயோக்கியத்தனங்களைச் சகிக்க முடியாமல் போலீசுக்கும் அரசாங்கத்துக்கும் புகார் கொடுத்த்தன் அடிப்படையில் 1997 இல் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இக்கோயிலுக்கு இந்து அறநிலையத்துறை நிர்வாக அதிகாரியை நியமித்த்து. அந்த நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தையும் அடித்து நொறுக்கினார்கள் தீட்சிதர்கள். இது தொடர்பான கிரிமினல் வழககு கூட இன்று வரை நிலுவையில்தான் இருக்கிறது அதிகாரிகளையும் அரசாங்கங்களையும் சரிக்கட்டிக் கொள்வதன் மூலம்தான் தில்லைக் கோயிலில் தமது ஆட்சியை நிலைநாட்டிக் கொள்ள தீட்சிதர்களால் முடிந்திருக்கிறது மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த நாங்கள்தான் தீட்சிதர்களின் கொட்டத்துக்கு முடிவு கட்டினோம்.

8 ஆண்டுகளுக்கு முன் நடராசர் கோயிலின் சிற்றம்பல மேடையில் நின்று திருவாசகம் பாடிய சிவனடியார் ஆறுமுகசாமியை அடித்து கையை முறித்து வீசினார்கள் தீட்சிதர்கள். தேவாரமும் திருவாசகமும் பாடப்பட்ட அதே சிதம்பரத்தில் அந்த தமிழிலக்கியங்களை அன்று கரையானுக்கு இரையாக்கிய தீட்சிதர்கள், அவற்றைப் பாடுவதற்குக் கூட தடை விதித்தார்கள். இந்தத் தடைக்கு எதிராகத் தொடர்ந்து மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடினோம். இந்தப் போராட்டத்தின் விளைவாக சிவனடியார் ஆறுமுகசாமி மட்டுமின்றி, பக்தர்கள் அனைவரும் திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடி இறைவனை வழிபடலாம் என்ற ஆணையைப் பெற்றோம்.

அந்த அரசாணையின் அடிப்படையில் திருவாசகம் பாடச்சென்ற சிவனடியாரையும், அவருக்குப் பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை உயரதிகாரிகளையும் தடுத்துத் தாக்கிய தீட்சிதர்களையும் அவர்கள் நடத்திய காலித்தனங்களையும் தொலைக்காட்சியில் இந்த நாடே கண்டது. சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடி வழிபடும் பக்தர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்று அரசு ஆணை பிறப்பித்திருந்தும், அதை மீறி பக்தரக்ளிடம் 50, 100 என்று பணம் வசூலிக்கிறார்கள் தீட்சிதர்கள். அரசாணை பிறப்பிக்கப் பட்ட பிறகும், சிற்றம்பல மேடையில் நின்று தமிழ்பாட ஆறுமுகசாமி அன்றாடம் தீட்சிதர்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.

பக்தர்களின் தமிழ் பாடி வழிபடும் உரிமையை ஆமல்படுத்துவதற்கே ஆலயத்தை அறநிலையத்துறை மேற்கொண்டால் மட்டும்தான் முடியும். அது மட்டுமல்ல, கோயில் சொத்துக்கள் களவு போவதைத் தடுக்கவும் இது ஒன்றுதான் வழி. சிதம்பரம் நகரப் போருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தைக் கள்ளத்தனமான விற்றிருக்கிறார்கள் தீட்சிதர்கள். இதற்கான ஆதாரங்களை சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறோம். தீட்சிதர்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கு போட்டிருக்கிறோம்.

மக்களுடைய பக்தி உணர்வைப் பயன்படுத்தி தமது சொந்த ஆதாயத்துக்காக கோவிலில் வழிப்பறிக் கொள்ளை நடத்தும் தீட்சிதர் கும்பலிடமிருந்து தில்லை நடராசர் கோயிலை அரசு கைப்பற்ற வேண்டும். கொள்ளையடிக்கும் உரிமையை மத உரிமை என்ற பெயரில் நிலைநாட்டிக் கொள்ள அரசு அனுமதிக்க்கக் கூடாது. ஒரு தனிச்சட்டம் இயற்றி இக்கோயிலை  அறநிலையத்துறையின் கீழ் அரசு கொண்டுவர வேண்டும். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு அனைவரையும் கோருகிறோம்.

நன்றி: வினவு http://vinavu.wordpress.com/2009/02/02/thillai1/


ரவி சீனிவாஸ் – க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 3

பிப்ரவரி 2, 2009

புதிய ஜனநாயகம் ஜனவரி 2009 இதழில் தோழர் சுடர் எழுதிய கட்டுரையை மறுக்கும் ரவிக்கு ஒரு வார்த்தை. 2009 பிப்ரவரி மாத காலச்சுவடுஇதழை அவசியம் படியுங்கள். ஏனெனில் அந்த இதழைத்தான் நீங்கள் ஆதாரப்பூர்வமாக நம்புகிறீர்கள். நீங்கள் சிலாகித்து பேசும் சங்கீதா ஸ்ரீராம், பசுமைப் புரட்சி குறித்து இந்த இதழில் என்ன எழுதியிருக்கிறார் என்று நேரம் கிடைக்கும்போது‘, ‘மேய்ந்துவிட்டு வாருங்கள்.

நீங்கள் சொல்லும் ‘குமரப்பா’ என்ன சொல்லியிருக்கிறார் என படியுங்கள்; மகிழுங்கள்!

முதல் இரண்டு பகுதிகள்:

ரவி சீனிவாஸ்க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 1

ரவி சீனிவாஸ்க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 2

இனி, 3ம் பகுதி: 

பசுமைப் புரட்சியின் பிறப்பு அல்லது அமெரிக்க கைக்கூலி எம்.எஸ். சுவாமிநாதனின் உருவாக்கம் 
பசுமைப் புரட்சியின் உருவாக்கத்தில் பங்கு வகித்த அறிவியல்அரசு கூட்டு 1940களில் இருந்தே தொடங்குகிறது. அப்போது மெக்சிகோவின் தூதுவராக இருந்த டேனியல்சீமும், அமெரிக்க துணை அதிபராக இருந்த ஹென்றி வால்சும் இணைந்து, மெக்சிகோவில் வேளாண்மைத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவி புரிய ஓர் அறிவியல் தூதுக் குழுவை நியமித்தனர். மெக்சிகோ அரசு மற்றும் ராக்பெல்லர் நிறுவன கூட்டு முயற்சியாக, மெக்சிகோ வேளாண்மை அமைச்சகத்தின் ஒரு பகுதியாக சிறப்புக் கல்வி அலுவலகம் 1943ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  1950களில் நார்மன் போர்லாக் ஓரளவு குட்டையான உயர் விளைச்சல் கோதுமை ரகத்தை உருவாக்கியபோது, பசுமைப்புரட்சி பிறந்தது. அற்புத விதைகள்மூலம் அது அதிக உற்பத்தி என்னும் தாரக மந்திரத்தை பரப்பியது.

1960ம் ஆண்டு நார்மன் போர்லாக், ரோமில், .நா. சபை அதிகாரிகள் மற்றும் இதர அறிவியல் அறிஞர்களிடையே பேசும்போது, தான், மெக்சிகோவில், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வரும் வேளாண்பொருளாதார வல்லுனர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் ஒன்றை நிறுவப் போவதாக குறிப்பிட்டார். உண்மையான மத வழக்கப்படி, நார்மன் போர்லாக் இதை, ‘கோதுமை அடியார்களுக்கான செயல்முறைப் பள்ளிஎன்று அழைத்தார்.

இந்த திட்டத்துக்கு ராக்பெல்லர் நிறுவனம் நிதியளிக்க, உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் சர்வதேச அங்கீகார முத்திரையளிக்க, மெக்சிகோ அரசு இதர வசதிகளை அளித்தது.

ஆப்கானிஸ்தான், சைப்ரஸ், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஈராக், ஜோர்டான், லிபியா, பாகிஸ்தான், இந்தியா, சிரியா, சவுதி அரேபியா, மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள 10 நாடுகள் முதலியவற்றிலிருந்து ‘தேர்ந்தெடுக்கப்பட்ட ஏகாதிபத்திய விசுவாசிகள் @ போர்லாக்கின் அடியார்கள் பயிற்சிக்காக வந்தார்கள்.
இப்படி இந்தியாவிலிருந்து போர்லாக்கிடம் பயிற்சி பெற சென்ற ‘அடியார்’தான் எம்.எஸ். சுவாமிநாதன்!  
இவர்களுக்கு முதலில் மெக்சிகோவில் இருந்த ‘சர்வதேச சோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு மைய’த்தின் அறிவியலறிஞர்களால், மரபியல் வேளாண் பொருளாதாரம், மண், தாவர வளர்ப்பு ஆகிய துறைகளில் ஓர் ஆண்டுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் தங்கள் சொந்த நிலங்களில் இந்தப் புதிய வேளாண்மையை ‘பரப்ப’ அனுப்பப்பட்டனர்.

இதனை தொடர்ந்து 1963 – 64ல் தனது ‘ஆன்மிக குரு’வான போர்லாக்கை இந்தியாவுக்கு வரவழைத்தார் எம்.எஸ். சுவாமிநாதன். அப்படி வந்த போர்லாக், ‘சந்திக்க’ வேண்டியவர்களை சந்தித்துவிட்டு, ‘வீர உரை’களையும் நிகழ்த்திவிட்டு சென்றார். சென்றதுமே இந்தியாவில் ஆய்வு செய்வதற்காக, ஓரளவு குட்டையான 400 கிலோ பயிர்வகைகளை அனுப்பி வைத்தார்.

நார்மன் போர்லாக்கின் விசுவாசம் + திறமைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் 1970ம் ஆண்டு, ‘சத்துணவை பொறுத்தவரை ஒரு புதிய உலக சூழலுக்கு’ வித்திட்டதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது!!!

இந்திய விவசாயிகளை கொத்தடிமையாக மாற்றியதில் சி. சுப்பிரமணியத்தின் ‘பங்கு!’ 
 போர்ட் நிறுவனம் 1952ம் ஆண்டிலிருந்தே இந்திய வேளாண்மைத் தளத்தில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளது என்பதை சென்ற பகுதியில் பார்த்தோம். அப்படி 1958ம் ஆண்டு ராக்பெல்லர் நிறுவனத்தின் கள இயக்குநரான ரால்ப் கம்மிங்ஸ் இந்திய வேளாண் தளத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

போர்லாக் அனுப்பிய பயிர் வகைகளை கொண்டு போதுமான ஆய்வுகளை நிகழ்த்திவிட்டதாக உணர்ந்த ரால்ப் கம்மிங்ஸ், இந்தியாவில் இதை ‘பெரிய அளவில்’ அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். இதற்காக அப்போதைய இந்திய வேளாண் அமைச்சரான சி. சுப்பிரமணியத்தை அணுகினார். சி. சு.வுக்கு கம்மிங்ஸின் ‘ஆலோசனைகள்’ பிடித்திருந்தன. இந்தியாவில் பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்த சி. சு. ஒப்புக் கொண்டார்.

ஆனால், பொருளாதார வல்லுநர்களான பி.எஸ். மின்ஹாசீம், டிஸ். சீனிவாஸ் ஆகியோர் இந்தக் கொள்கையை எதிர்த்தனர்.

1966ம் ஆண்டு வந்த பெரும் வறட்சி இந்திய உணாவு உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தச் சமயத்தில் அமெரிக்காவில் இருந்து முன் எப்போதும் இல்லாத வகையில் உணவு தானியங்கள் வந்து இறங்கின. இது உணவுச் சார்பு, புதிய கொள்கை வடிவமைக்கப்பட வழி வகுத்தது.

அப்போது அமெரிக்க அதிபராக இருந்த லிண்டன் ஜான்சன், குறுகியகால அடிப்படையில் கோதுமையை அனுப்பி வைத்தார்.

ஆனால், இந்திய வேளாண்மை அசைச்சரான சி. சுப்பிரமணியத்துக்கும், அமெரிக்க வேளாண்மைச் செயலாளர் ஆர்வில் பிரிமேனுக்கும் இடையே பசுமைப் புரட்சி உடன்படிக்கை கையெழுத்தாகும் வரை, அமெரிக்க அதிபர் ஒரு மாத காலத்துக்கு மேல் உணவு மானியம் அளிப்பது குறித்து எந்தவிதமான உறுதி மொழியையும் அளிக்க மறுத்துவிட்டார் என்பதை நினைவில் கொள்க!

1965ம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி இதற்கு இசையவில்லை. அவர்திடீரெனமறைந்த பிறகே உடன்படிக்கை, இந்திய திட்டக் குழுவின் முன் அனுமதிபெறாமல் கையெழுத்தானது!!
அதாவது, அனுமதி பெறாமல், சட்டத்தை மீறி சி.சுப்பிரமணியம் நம் நாட்டு விவசாயிகளை ஏகாதிபத்தியத்துக்கு கொத்தடிமைகளாக விற்றுவிட்டார். 
தொடரும்

இதன் இறுதிப் பகுதி நாளை வெளியாகும். அதில், ரவி சீனிவாஸ் குறிப்பிட்டுள்ள,

//1983ல் கிளாட் ஆல்வரிஸ் இந்த விவாதங்களை அப்போதிருந்த இல்லஸ்டேரட் வீக்லியில் எழுதிய கட்டுரை மூலம் பலர் அறியச் செய்தார்.//

கிளாட் ஆல்வரிஸ் பற்றி எழுதுவதாக இருக்கிறேன். காரணம், எஸ். வி. ராஜதுரையும் இதில், இந்த கிளாட் ஆல்வரிஸுடன் சம்மந்தப்பட்டிருக்கிறார்! இதைக் குறித்து ‘புதிய ஜனநாயகம்’ 3ம் ஆண்டு இதழ்களிலேயே தோழர் ஆர். கே. விரிவாக எழுதியிருக்கிறார்!!!


ரவி சீனிவாஸ் – க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 2

ஜனவரி 31, 2009

இரண்டாம் பகுதியை ஆரம்பிப்பதற்கு முன், ரவி, ஒரு வார்த்தை.

போன பதிவில், ஆசிய வேளாண்மை குறித்து எழுதியிருந்தேன். அதற்கும் நீங்கள் குருகுலவாசத்தில் கற்ற ஆசிய வேளாண்மை குறித்த பார்வைக்கும் வித்தியாசம் உண்டு. காரணம், நீங்கள்பரிமாணம்வழியாகநிகழ்காலத்தில் இருந்தவர்! பீடாதிபதியாக இருந்து உங்களுக்கு மார்க்சியம்கற்றுத் தந்தஎஸ். என். நாகராசன், சொல்லும் ஆசிய உற்பத்தி முறை வேறு. பதிவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள ஆசிய உற்பத்தி முறை வேறு. இரண்டையும் போட்டு குழப்பி உரையாட வராதீர்கள்.

‘ஆசிய உற்பத்தி முறையா! – சோசலிசமா? வரலாற்றில் எது சாத்தியம்?’ (‘நிகழ்’ 21, மார்ச்’ 92, ‘மார்க்சியம் – கிழக்கும் மேற்கும், பக்கம்: 56 – 61) என உச்சிக் குடுமி அசைய எஸ். என். நாகராசன் கேட்பதற்கும், முதல் பகுதியில் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அவசியம் தோழர்கள் உணர வேண்டும். இல்லாவிட்டால், ‘வைணவத்தில் மார்க்சிய சித்தாந்தத்தை’ தரிசித்த எஸ். என். நாகராசன் பரம்பரையை சேர்ந்த ரவி சீனிவாஸ் வந்தடைந்த ‘இந்துத்துவா மார்க்சிய’த்துக்கு நம்மையும் அறியாமல் நாமும் வந்தடைவோம்!

ஏதோ பயம் காட்டுவதாக நினைத்துவிடாதீர்கள். இந்த எஸ். என். நாகராசன் இருக்கிறாரேஅடேங்கப்பா சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். உடம்பெல்லாம் விஷம். தனிப் பதிவாக இவரை குறித்து எழுதும் எண்ணம் இருக்கிறது. அரைகுறை மார்க்சிய அறிவுடன், ஸோ கால்ட் அறிவுஜீவி பரம்பரையை தமிழ் சிறுபத்திரிகை சூழலில் உருவாக்கிய பெருமை இவருக்கு மட்டுமே உண்டு! இயக்கம், கட்சி என்றெல்லாம் இருக்க வேண்டாம். அது அவசியமில்லை. தனியாக நாம் செயல்படலாம். எழுதி எழுதி அறிவை மட்டுமல்ல, புரட்சியையும் வரவழைக்கலாம்என்பதானபாதுகாப்பானபுரட்சிக்கு வித்திட்ட பிதாமகர் இவர்தான். இவரிடம், வாய் போத்திஇளைய மார்க்ஸைஅறிந்துக் கொண்ட எஸ். வி. ராஜதுரை, தத்தகாபித்தகா என்று எழுதியஅந்நியமாதல்நூலை காரணமில்லாமலா, ‘க்ரியாராமகிருஷ்ணன் வெளியிட்டார்?

இப்படி சிறப்புவாய்ந்த இந்த எஸ். என். நாகராசனிடம்தான் தன் மகன் கண்ணனை மார்க்சியம்கற்கசுந்தர ராமசாமி அனுப்பினார். அட பொய்யில்லை ஸ்வாமி! சத்தியமான உண்மை இது.

தொழிற்கல்வியை முடித்துவிட்டு, இலக்கிய மானேஜராக, ஒன் மேன் இலக்கிய தாதாவாக (ஆர்மி?!) அமர முயன்ற கண்ணனுக்கு, அதென்ன பொடலங்கா மார்க்சியம்? என்ற கேள்வி திடீரென எழுந்தது. ‘அம்பி, சரியான கேள்வி கேட்டுட்டடாகவலையேப்படாதநம்மாள் நோக்கு மார்க்சிய சித்தாந்தத்தை சரியா சொல்லித் தருவா…’ என உச்சி (குடுமி) மோந்து வேலூர் காந்தி நகரில் (காட்பாடிக்கு அருகில்) இருந்த எஸ். என். நாகராசனிடம் அனுப்பி வைத்தார்.

கண்ணனும் அவருடனேயே தங்கி, (வேஷ்டி, சட்டைகளை துவைத்துப் போட்டாரா என்று தெரியவில்லை!) மார்க்சியம்கற்றார்!’

எஸ். என். நாகராசன் உபன்யாசம் செய்யச் செய்ய அதை கண்ணன், ஆடியோ கேசட்டில் பதிவு செய்தார். முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் வழியில் கிட்டத்தட்ட 20க்கும் அதிகமான கேசட்டுகள் நிரம்பின! எப்போது வேண்டுமானாலும் இந்த உபன்யாச ஆடியோ கேசட்டுகள், சிடி உருவில் காலச்சுவடுசார்பாக விற்பனைக்கு வரலாம்! அப்படி வரவேண்டும் என்பதுதான் ஆசை. அப்போதுதான் தோழர் மருதையன், தோழர்சூரியன்உட்பட முன்னணி தோழர்களை பேச வைத்து நாமும் மார்க்சிய சிடிகளை வெளியிட முடியும்!

இப்படியாக ஊன் உறக்கமில்லாமல் கண்ணன்கற்றமார்க்சியத்தைதான் இப்போதுகாலச்சுவடுஇதழ்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

சரி, எங்கோ ஆரம்பித்து, எங்கோ வந்துவிட்டோம்.

முதல் பகுதி :

ரவி சீனிவாஸ் – க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 1

இனி 2வது பகுதி –

மெரிக்காவுக்கு ஏன் திடீரென வேளாண்மை மீது ஆர்வம் வரவேண்டும்?

காரணம், சென்ற பதிவின் இறுதியில் சொன்னபடி தோழர் மாசேதுங் மீது இருந்த பயம்தான். முதல் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் சீனத்தில் விவசாயிகளை ஒன்றிணைத்து தோழர் மாசேதுங் எழுப்பி வந்த விவசாயிகளின் இயக்கங்கள் குறித்த தாக்கம் ஆசிய நாடுகள் எங்கும் ஒரு உத்வேகத்தை அளித்தன. வேளாண்மையை அடிப்படையாக கொண்ட ஆசிய நிலப்பரப்பில் தோழர் மாசேதுங்கின் வழிமுறை ஒரு புதிய வெளிச்சத்தை அளித்தது.

1927ம் ஆண்டு, மார்ச் மாதம் தோழர் மாசேதுங் வெளியிடப்பட்ட ஹுனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை நினைவுக்கு வருகிறதா?

இரண்டாம் உலகப் போருக்குப் பின், இங்கிலாந்தை போலவே தானும் ஆசிய நாடுகளில் கொள்ளையடிக்க வேண்டும் என அமெரிக்கா விரும்பியது. இங்கிலாந்து அரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலனி நாடுகளுக்குசுதந்திரம்அளிக்கும்படி நெருக்கியது. வேறு வழியில்லாமல், பிரிட்டனும் அதற்கு ஒப்புக் கொண்டது 

இப்படி சுதந்திரமடைந்தஆசிய நாடுகள், அதிகரித்து வந்த விவசாய போராட்டங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இந்த நேரத்தில்தான் சீனாவில் கம்யூனிச கட்சி ஆட்சிக்கு வந்தது. உள்ளூர் விவசாயச் சங்கங்கள், நிலங்களை ஆக்ரமித்துக் கொள்ளவும், கடன்களை தள்ளுபடி செய்யவும் , சொத்துக்களை மறு விநியோகம் செய்யவும் சீன அரசு ஊக்குவித்தது.
இந்த சீன அனுபவம் ஆசிய நாடுகள் முழுக்க உற்சாக ஊற்றை வரவழைத்தது. விவசாய இயக்கங்கள், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாம் மற்றும் இந்தியாவில் பரவத் தொடங்கின.
மேலே குறிப்பிட்ட ஆசிய நாடுகளில் புதிதாக தலைமையேற்றிருந்த அரசியல் தலைவர்கள், இத்தகைய விவசாய போராட்டங்களை ஒடுக்கி, அரசியல் நிலையை அமைதிப்படுத்த வழிகளை கண்டுப்பிடிக்க வேண்டியிருந்தது. முக்கியமாக கிராமப் பகுதிகளில் நிலவியஅபாயகரமானசூழ்நிலையை சீர்செய்வது முக்கிய அஜண்டாவாக இருந்தது.
அதனால்தான் இந்திய அரசின் உத்தரவுப்படி 1950ல் பெரும்பாலான இந்திய மாநிலங்கள், ஜமீந்தாரி முறை ஒழிப்பு, குத்தகைகாரர்களுக்கு பாதுகாப்பு, நியாயமான கூலி நிர்ணயம் போன்ற வடிவங்களில் நிலச்சீர்திருத்தத்தை கொண்டுவந்தன. சில உச்சவரம்புகளும் கொண்டுவரப்பட்டன.
இதே காலகட்டத்தில்தான் சத்தமில்லாமல் அமெரிக்காவில் வேளாண்மை உற்பத்தி மற்றும் வேளாண்மை அமைதி குறித்த 2வது செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு வந்தது. ‘சீனாவில் ஏற்பட்ட மாற்றம்இந்த செயல் திட்டத்தை இன்னும் வேகப்படுத்தியது.
அதாவதுஅரசியல்தலையீட்டிற்கான ஒரு புதிய தலைமுறைக்காக அமெரிக்க நிதி நிறுவனங்கள், ராக்பெல்லர், போர்ட் நிறுவனங்கள், மற்றும் உலக வங்கி போன்றவை தங்களை தயாரித்துக் கொண்டன.
கிராமப்புறத்தை அரசியல் ரீதியாக நிலைப்படுத்துவது முக்கியமான நோக்கமாக இருந்தது. விவசாய சமுதாயம் முளைவிடும் புரட்சித்தன்மையுடன் விளங்கியதால், அது நெருக்கப்படும்போது, புதிய முதலாளித்துவ ஆதிக்கம் செலுத்தும் புதிய அரசுகளுக்கு எதிராக போராட்டம் கொடுக்கத் தயங்காது என்பது சர்வதேச ரீதியாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. இந்த புரிந்து கொள்ளல், புதிய ஆசிய அரசுகள் கம்யூனிஸ ஈர்ப்பிலிருந்து பிரித்து இழுக்க, கிராமப்புறங்களை முன்னேற்றுவதை குறிக்கோளாக கொண்டிருந்த, அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்ட, 1952ம் ஆண்டு கொழும்புத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளத் தூண்டின. கிராமப்புறங்களை நிலப்படுத்தும் வழிமுறைகளாக அந்நிய மூலதனத்தால் அரவணைக்கப்படும் கிராம முன்னேற்றத் திட்டங்கள் பரிந்துரை செய்யப்பட்டன…” என்கிறார்கள் ராபர்ட் ஆந்தர்சன் மற்றும் பேக்கர் மோரிசன்.
அதாவது ரவி, உணவு உற்பத்தியை அதிகரித்து, அதன் மூலம் விவசாயப் போராட்டத்தை மழுங்கச் செய்வதற்கான ஆயுதமாக உருவாக்கப்பட்ட பசுமைப் புரட்சி திட்டத்தில் அறிவியலும், அரசியலும் கலப்புமணம் புரிந்து கொண்டன!

ஆனால், அமெரிக்க வேளாண்மை பார்வை இயற்கையோடு கூட்டுறவு வைத்துக் கொள்ளும் அடிப்படையில் அமையவில்லை. பதிலாக இயற்கையை வெற்றிக் கொள்ளும் அடிப்படையில் அமைந்திருந்தது. அதாவது கடன் அதிகரிப்பு, வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் போன்ற வெளியில் இருந்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களின் உபயோக அதிகரிப்பின் அடிப்படையில் அமைந்திருந்தது.

இது தங்களுடைய அரசியல் முன்னுரிமைகள் மற்றும் நலன்களை பேணிக் காக்க உதவுவதால் இந்திய ஆளும் வர்க்கமாக இருந்த மேல் வகுப்பினரில் பெரும்பாலோர் இந்த வழிமுறைக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். காரணம், நிலத்தில் இறங்கி அவர்கள் யாரும் வேலை செய்ததில்லை!

ஆனால், அமெரிக்க பாணி வேளாண்மை அமெரிக்காவிலேயே சரியாக பிரபலமாகவில்லை என்பதுதான் உண்மை. செயற்கை உரங்களின் அதிகமான உபயோகம், ஓரினப் பயிர்களை அதிகமாக பயன்படுத்தல், வேகமான, மிகையான இயந்திரமயப்படுத்தல் ஆகியவை 30 ஆண்டுகளுக்குள்ளாகவே அமெரிக்காவின் வளமான சமவெளிகளை பாலைவனமாக்கிவிட்டன.

1930ல் அமெரிக்காவில் தோன்றிய பெரும் பஞ்சம் பெருமளவில் அமெரிக்க வேளாண்மை புரட்சியின் விளைவாக ஏற்பட்டதுதான் என்கிறார் ஹைமேன். ஆனால், இந்தத் தகவல்கள் உலகின் பிற பகுதிகளுக்கு சென்றபோது ராக்பெல்லர் நிறுவனத்தின் பார்வைக்கு சென்று, கவனமாக பரிசீலிக்கப்பட்ட பின்பே அனுப்பப்பட்டன.

இந்த விவரங்கள் அனைத்தும் இந்தியாவில் மூடி மறைக்கப்பட்டது. இவ்வளவு கொடூரமான இந்த அமெரிக்க மாதிரியை இந்தியாவுக்கு மாற்றியமைப்பதில் மூன்று பன்னாட்டு குழுக்கள் ஈடுபட்டன. அவை:

1. தனியார் அமெரிக்க நிறுவனத்தினர் (போர்ட், ராக்பெல்லர்)

2. அமெரிக்க அரசு

3. உலக வங்கி

போர்ட் நிறுவனம், 1952ம் ஆண்டு முதலே இந்திய வேளாண்மைத் தளத்தில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளது. 1905ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவனம், 1958ம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்டது. ராக்பெல்லர் நிறுவனத்தின் கள இயக்குநரான ரால்ப் கம்மிங்ஸ், இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவனத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டார். 1960ம் ஆண்டு பதவிக்கு வந்த ஏ. பி. ஜோஷியை அடுத்து 1965ம் ஆண்டு எம். எஸ். சுவாமிநாதன் இந்தப் பதவிக்கு வந்தார்.

எம். எஸ். சுவாமிநாதனை குறித்து பார்ப்பதற்கு முன், இந்தியாவில் போர்ட் மற்றும் ராக்பெல்லர் நிறுவனத்தின் பங்கை குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.

போர்ட்  1952ம் ஆண்டு இந்தியாவிலுள்ள சுமார் 100 கிராமங்கள் அடங்கிய 15 சமுதாய மேம்பாடுத் திட்டங்களுக்கு போர்ட் நிறுவனம் நிதியுதவி அளித்தது. ஆனால், 1959ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்த 13 அமெரிக்க வேளாண் அறிஞர்கள் அடங்கிய போர்ட் நிறுவனத்தின் குழு, இந்தியாவிலுள்ள 5 லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களிலும் ஒரே சமயத்தில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியாது என பரிந்துரை செய்ததை அடுத்து இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இதற்கு பதிலாக குறிப்பிட்ட சில பகுதிகளை எடுத்துக் கொண்டு அங்கு தீவிரமாக இந்த அமெரிக்க வேளாண்மை கொள்கையை நடைமுறைப்படுத்தலாம் என்று அந்தக் குழு பரிந்துரை செய்தது. இதனை அடுத்து 1960 – 61ம் ஆண்டு தீவிர வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (IADP) அறிமுகப்படுத்தப்பட்டது.

ராக்பெல்லர்  ராக்பெல்லர் நிறுவனம், இந்திய ஆய்வு நிறுவனங்களை மறு சீரமைப்பதற்கு பண உதவி செய்து வந்தது. அத்துடன் அமெரிக்க நிறுவனங்களை சென்று பார்க்க, அங்கு பயிற்சி பெற, இந்தியர்களுக்கு நிதியுதவியும் அளித்தது. 1956க்கும் 1970க்கும் இடையில் அமெரிக்க வேளாண்மை நிறுவனங்களையும், ஆய்வு நிலையங்களையும் சென்று பார்க்க இந்தியத் தலைவர்களுக்கு 90 குறுகியகால நிதியுதவி அளிக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த நிறுவனத்தின் கீழ், 150 ஆராய்ச்சியாளர்கள் கற்றுத் தேறினர். இந்தக் காலகட்டத்தில் இரண்டாயிரம் இந்தியர்கள் அமெரிக்க வேளாண்மைக் கல்விக் கூடங்களை பார்வையிட அமெரிக்க அரசு நிதியுதவி அளித்தது.

ஏழை நாடுகளில், அதிக மூலதனத்தை வாங்கிக் கொள்ளும் இந்த வேளாண்மை மாதிரியை புகுத்துவதற்கு கடன் அளிக்க உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகள் முன்வந்தன. 1960களின் மத்தியில் இந்தியா தனது நாணய மதிப்பை 37.5% குறைக்க கட்டாயப்படுத்தப்பட்டது.

இந்திய செயற்கை உரத் தொழிற்துறையில் அந்நிய மூலதனம் அனுமதிக்கப்படுவதற்கான சாதகமான சூழ்நிலைகளை தோற்றுவித்தல், இறக்குமதி கொள்கையை தாராளமயப்படுத்தல், உள்நாட்டு கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்குதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த உலக வங்கியும், அமெரிக்க மானிய அமைப்புகளும் இந்தியாவை நெருக்கின.

இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்த தேவையான அந்நியச் செலாவணிக்கு உலகவங்கி கடன் அளித்தது. 1966 – 71க்கு இடைப்பட்ட ஐந்தாண்டுத்திட்டத்தில் பசுமைப்புரட்சிக்கான அந்நிய செலவாணி ரூ. 1114 கோடியாகும். இது அதற்கு முந்தைய ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைத் துறைக்கு ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகையைப் போல் ஆறு மடங்கு! (ரூ. 191 கோடி)

சரி, அடுத்ததாக சி. சுப்பிரமணியம் எதனால் பசுமைப் புரட்சியை இந்தியாவுக்கு கொண்டு வந்தார் என்று பார்க்கலாமா? அல்லது அமெரிக்க கைக்கூலியாக உருவான எம். எஸ். சுவாமிநாதனின் பின்புலம் குறித்து பார்க்கலாமா?

அட, இரண்டையுமே பார்ப்போமே!

– தொடரும்

 


ரவி சீனிவாஸ் – க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 1

ஜனவரி 30, 2009

புதிய ஜனநாயகம்ஜனவரி 2009 இதழில் வெளியான தோழர் சுடர் எழுதிய எம்.எஸ்.சுவாமிநாதன்: வேளாண் விஞ்ஞானியா? அமெரிக்கக் கைக்கூலியாஎன்ற கட்டுரையை கீற்று இணையதளம் வெளியிட்டிருந்தது. (http://keetru.com/literature/essays/sudar.php).

அதற்கு ரவி சீனிவாஸ் ஒரு எதிர்வினை எழுதியிருக்கிறார். அது கீற்றில் வெளியாகியிருக்கிறது. அந்தப் எதிர்வினையை தனது வலைத்தளத்திலும்எம். எஸ். சுவாமிநாதன், பசுமைப்புரட்சிகட்டுரைஎதிர்வினை என்ற தலைப்பில் வெளியிட்டிருகிறார். http://www.ravisrinivas.blogspot.com/

நண்பர்கள், அந்த இரு கட்டுரைகளையும் வாசித்தப் பின் இந்த மறுப்பை படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பல நூல்கள், ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கட்டுரை அமைவதால், நீளம் கருதி இதை பகுதிப் பகுதியாக வெளியிடுகிறேன்.

இந்த மறுப்பு ரவி சீனிவாஸ் என்ற தனி மனிதனுக்காக மட்டுமல்ல. அவரைப் போன்று இருக்கும் அனனத்து வலதுசாரிகளுக்காகவும்தான். இந்திய வேளாண்மை, விவசாயிகளின் நலன், குறித்த புரிதலுக்காகவும்தான். இன்று இணையத்தில் வளைய வரும் பல நண்பர்களுக்கு இந்திய விவசாயிகளின் நிலை தெரியவில்லை… அதாவது தெரிவிக்கப்படவில்லை. பசுமைப் புரட்சி என்ற பெயரால் அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்த மோசடி கொஞ்சம் நஞ்சமல்ல. ரத்தத்தை உறைய வைக்கும் அந்த சரித்திரத்தை அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும்.

விவசாயிகளின் இப்போதைய வறுமை நிலைக்கு யார் காரணம்? கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொள்ளும் நிலமைக்கு அவர்களை தள்ளியது யார்? விவசாய நிலங்கள் நச்சுத்தன்மையுடன் பயனற்று போனதற்கு எது காரணம்… என முடிந்தளவு இந்தக் கட்டுரையில் ஆராய்ந்திருக்கிறேன்.  

பதிவாக, இதை பகிர்ந்துக் கொள்ள காரணமிருகிறது. இந்த நீண்ட நெடிய வரலாற்று பின்னணியை புரிந்து கொண்டால்தான், நக்சல்பாரிகளின் தேவையை, அவசியத்தை உணர முடியும். இந்தியா சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்படும் காலத்தில் இருந்த கம்யூனிஸ கட்சிகளின் தலைமை விவசாயிகளுக்கு இழைத்த துரோகமும் இதனுள் அடங்கி இருக்கிறது. எம். எஸ். சுவாமிநாதன், போன்ற புறம்போக்கு கழிசடை, அமெரிக்க கைக்கூலிகளின் உருவாக்கமும் இதே வரலாற்றில்தான் புதைந்திருக்கிறது.

உணர்ச்சி வசப்பட்டு ரவி குறிப்பிட்டுள்ளார் பாருங்கள்…

// பசுமைப்புரட்சிக்கு எதிர்ப்பு வந்த போது அதை வலியுறுத்தி ஆதரித்தவர் அன்றைக்கு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம். அவரும் அமெரிக்க கைக்கூலியா.//

கைக்கூலி அல்ல ரவி… இந்திய விவசாயிகளை அமெரிக்காவுக்கு கொத்தடிமையாக விற்ற ‘தலைவர்’தான் சி. சுப்பிரமணியம்.  இந்திய பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, பசுமைப் புரட்சி இந்தியாவில் வருவதை தடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் ‘திடீரென’ மறைந்துவிடவே, அவசர அவசரமாக எம்.எஸ். சுவாமிநாதன், சீ… மன்னிக்க, சி. சுப்பிரமணியம், துணையுடன் பசுமைப் புரட்சியை இந்தியாவின் வேளாண் முறையாக்கினார்.

சரி, பதிவுக்கு வருவோம்.

தகவல் பிழைகளோ, பொருள் பிழையோ இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.

சூனியம்

ரவி சீனிவாஸ், பொய் சொல்லுவார், உண்மைகளை திரித்து கூறுவார் என்பதற்கு வலுசேர்ப்பது போலவே, அவரது இந்த எதிர்வினையும் அமைந்திருக்கிறது.

உண்மையில் ‘பசுமைப்புரட்சி’ என்பது என்ன, அது எப்போது தோன்றியது, ஏன் உருவானது, யாரால் – எந்த சூழலில் வடிவமைக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன், ஆசிய வேளாண்மை என்றால் என்னவென்று பார்த்துவிடுவோம். அதாவது பசுமைப் புரட்சிக்கு முந்தைய காலகட்டம். இதை தெரிந்து கொண்டால்தான் பசுமைப் புரட்சியின் விபரீதத்தை முழுமையாக உணர முடியும்.

இந்திய – ஆசிய வேளாண்மை  ஒரு வேளாண்மை ஆவணம்என்பதுநவீன வேளாண்மையின் தந்தை என்றழைக்கப்படும் சர் ஆல்பிரட் ஹோவர்ட் எழுதியபுகழ்பெற்ற புத்தகம். 1940களில் வெளியான இந்தப் புத்தகத்தில்,

ஆசியாவில் மிகவும் நிலைபெற்றுவிட்ட வேளாண்மை அமைப்பை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இன்று இந்திய, சீன சிறு வயல்களில் நிகழ்ந்து கொண்டிருப்பவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இடம் பெற்றுவிட்டன. கீழ்திசை வேளாண்மை நடைமுறைகள் உச்சகட்ட சோதனையிலும் வெற்றிகரமாக தேறிவிட்டது. பண்டைக் காலத்திய காடுகளைப் போல, புல்வெளிகளைப் போல, வேளாண்மையும் உறுதியாக நிலைபெற்றுவிட்டது..’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஆல்பிரட் ஹோவர்ட் இப்படி சொல்வதற்கு முன்பே, அதாவது 120 ஆண்டுகளுக்கு முன்பே, டாக்டர் ஜான் அகஸ்டஸ் வோல்க்கர் திட்டவட்டமாக ஆசிய – இந்திய வேளாண்மை முறையே சிறந்த முறை என புகழ்ந்திருக்கிறார். இவர் 1889ம் ஆண்டு, இந்திய வேளாண்மையில் வேதியியலைப் புகுத்த, ஆங்கில அரசுக்கு ஆலோசனை வழங்க, இந்திய அரசுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டவர்.

இங்கிலாந்திலுள்ள ராயல் வேளாண்மை நிறுவனத்துக்கு அளித்த அறிக்கையில் வோல்க்கர் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்:

இந்திய வேளாண்மை ஒட்டுமொத்தமாக மிகவும் பழமையானது என்றும் பிற்போக்கானது என்றும் கருதுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பெரும் பகுதிகளில், அதை மேலும் செழுமையடையச் செய்வது தேவையற்ற ஒன்று. இந்திய வேளாண்மையில் மேம்பாடு செய்வதை விட, ஆங்கில வேளாண்மையில் மேம்பாடு செய்ய பரிந்துரை செய்யலாம்.

சாதாரண வேளாண்மை நடைமுறையில், நிலத்தை களைகள் இல்லாமல் வைத்துக் கொள்வதில், தன்னிச்சையான நீர்ப்பாசன முறைகளை பின்பற்றுவதில், மண்வளம் பற்றிய அறிவியல், எப்போது விதைக்க வேண்டும், எப்போது அறுவடை செய்ய வேண்டும் என்பது குறித்த அனுபவத்தில் இந்திய வேளாண்மையை விட சிறந்த ஒன்றை கண்டுபிடிப்பது கடினமான செயல். மாற்றுப் பயிர்முறை, கலப்பு பயிர்முறை ஆகியவை குறித்த அவர்கள் அறிவு அற்புதமானது. இப்படியொரு செம்மையான வேளாண்மை முறையை இதுவரை கண்டதில்லை என அடித்துச் சொல்வேன்..”

என்கிறார் வோல்க்கர். அதனால்தான், உலகப் போருக்கு முன்புவரை ஐரோப்பாவுக்கு கோதுமை ஏற்றுமதி செய்துவந்ததில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது.

”1873ல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட பின்னர், முதன்முதலாக கோதுமை இந்தியாவிலிருந்து வந்தது. இதற்கு காரணம், தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த ஒரு பகுதியிலிருந்து மலிவான விலையில் தொடர்ந்து கோதுமையை பெற பிரிட்டிஷ் வியாபாரிகள் வலியுறுத்தியதுதான். அதனால்தான் தங்கள் பேரரசுக்கு தொடர்ந்து உறுதியான கோதுமை பெற உகந்த இடமாக இந்தியாவை, பிரிட்டன் கருதியது. இதனையடுத்து நூற்றாண்டுகளாக விவசாயிகள் பயிர் செய்து வந்த சிந்து, கங்கை நதிப்பள்ளத்தாக்குகளில் கால்வாய்களையும், இருப்புப்பாதைகளையும் போடுவதில் தொழிற்சாலை பெருமுதலாளிகள் இறங்கினர்…” என்கிறார் பான் போர்கன்.

பல நூற்றாண்டுகளாக விவசாயிகள் தங்களுடைய சொந்த நிலத்தில், தாங்கள் பயிரிட்ட தானியத்தில் இருந்து, சிறந்த விதைகளை தேர்ந்தெடுத்து, பிரித்து, பாதுகாத்து, மீண்டும் விதைத்து, இயற்கை தன் போக்கிலேயே இழந்த உயிர்சத்துக்களை மீண்டும் பெற்றிட அனுமதித்து வந்திருக்கிறார்கள். 

ஒரேவார்த்தையில் சொல்ல வேண்டுமானால், பாரம்பரிய வேளாண்மை முறைகள் கலப்பு மற்றும் மாற்றுப் பயிர் முறைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உதாரணமாக, பயறு வகைகள் பூமிக்கு அளிக்கும் நைட்ரஜன் சத்து, அடுத்ததாக பயிரிடப்படும் தானிய வகைகளின் விளைச்சலுக்கு பெருமளவு உதவியது.

இதற்கு மாற்றானதுதான் பசுமைப் புரட்சி. இது ஒரே மாதிரியான ஓரினப் பயிர்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது….

அதனால்தான் பயங்கரமான பஞ்சம் நிலவிய காலத்திலும் கூட, இந்தியாவெங்கும் ஒவ்வொரு வீட்டிலும் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டன; விதைகள் இல்லாமல் உணவு உற்பத்தி தடைப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கம்தான் இதற்கு காரணம்.

புரிகிறதா? இப்படி இனாமாக வயல்களில் இருந்து கிடைத்து வந்த விதைகளைத்தான், விலை கொடுத்து வாங்கும் பொருளாக பசுமைப் புரட்சி மாற்றியிருக்கிறது. அதுமட்டுமல்ல, விதைகளை வாங்குவதற்காக ஒவ்வொரு நாடும் சர்வதேசக் கடன்களை பெற வேண்டியிருந்தது; பெற்றே ஆக வேண்டும் என உலகவங்கி நிர்பந்தித்தது.

இதன் தொடர்ச்சியாக விவசாயிகள் விதைகளை பயன்படுத்த வங்கிக்கு படை எடுத்தனர். வேறெதற்கு கடன் வாங்கத்தான். ஆனால், ரவி இதை மறுக்கிறார். இதற்கான பதிலை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்…

இப்படி இருந்த இந்திய வேளாண்மை, ஏன் பசுமைப் புரட்சிக்கு சென்றது? இந்தக் கேள்விக்கான விடையை பார்ப்பதற்கு முன், பசுமைப் புரட்சியை எந்த சூழலில் அமெரிக்கா (சந்தேகமே வேண்டாம். அமெரிக்காவின் கண்டுபிடிப்புத்தான் இது) உருவாக்கியது என சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

முதல் உலகப் போருக்கும், ‘சுதந்திரத்துக்கும்’ இடைப்பட்ட காலத்தில், உலகப் பணவாட்டத்தின் காரணமாக ஏற்பட்ட ஏற்றுமதி சரிவு, பொருளாதர வீழ்ச்சி, 2ம் உலகப்போரின்போது கிட்டத்தட்ட முழுவதுமாக நொடிந்துப்போன கப்பல் போக்குவரத்து,

மும்பை கப்பல் தொழிலாளர் தோழர்களின் போராட்டம், எழுச்சி நினைவுக்கு வருகிறதா? அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் இங்கே நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்…

போன்ற காரணங்களால், இந்திய வேளாண்மைக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இதை மீட்டெடுப்பதற்கான சூழலியல் மாற்று மற்றும் தற்சார்பு குறித்து, ‘தலைவர்கள்’ ஆராய ஆரம்பித்தார்கள். 1942 – 1946 வரை தடைசெய்யப்பட்டிருந்த ‘மகாத்மா’ காந்தியின் ‘அரிஜன்’ பத்திரிகையில், 1946 – 47ல் வேளாண் பற்றாக்குறையை அரசியல் ரீதியாக எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என பல கட்டுரைகள் வெளியாகின.

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி எப்படி அதிகமான உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்று மீரா பென், குமரப்பா (ரவி சீனிவாஸ் குறிப்பிட்டுள்ளது இவரைத்தான்), பியாரேலால் ஆகியோர் கட்டுரைகளை எழுதினார்கள்.

//ஆனால் ஜே.சி.குமரப்பா போன்ற காந்தியர்கள் அதற்கு முன்பே இந்தியாவில் எத்தகைய வேளாண்மை வேண்டும் என்பதை எழுதியிருந்தனர். குமரப்பா என்ன எழுதினார் என்பது இந்தப் பொய்யர்களுக்கு தெரியுமா.//

என ஆவேசத்துடன் கீ போர்டை தட்டியபடி ரவி கேட்கிறார். கஷ்டம். ரொம்ப ரொம்ப கஷ்டம். குமரப்பா சொன்னது இந்திய வேளாண்மையை அப்படியே பின்பற்ற வேண்டும் என்றுதான். ஆனால், ரவி இதற்கு மாற்றான பசுமைப் புரட்சிக்கு கொடி பிடிக்கிறார்!! முன்னுக்குப் பின் முரண்.

சும்மா, நான்கு பெயர்களை தெரிந்து வைத்துக் கொண்டு ‘எதிர்வினை’ புரியக் கூடாது ரவி.

இந்த சூழலில்தான் சத்தமில்லாமல் அமெரிக்க நிறுவனங்களிலும், மானிய அமைப்புகளிலும் வேளாண்மை வளர்ச்சி குறித்து வேறுவித பார்வை உருவெடுத்துக் கொண்டிருந்தது. அதாவது ஆசிய உற்பத்தி முறைக்கு எதிரான மாற்றுப் பார்வை. இந்தப் பார்வையைத்தான் மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும் என்ற முடிவுடன் அமெரிக்கா களம் இறங்கியது.

இப்படி வேறு பாதைக்கு உலக வேளாண்மையை கொண்டு செல்ல வேண்டும் என அமெரிக்கா தீர்மானித்ததற்கு காரணம் என்ன தெரியுமா?  கம்யூனிஸம்!

ஆமாம், பசுமைப் புரட்சிக்கு காரணம் தோழர் மாசேதுங் மீது அமெரிக்காவுக்கு இருந்த பயம்தான்!!!!

தொடரும்


இதற்குதானே ஆசைப்பட்டாய் பிரபாகரா…

ஜனவரி 29, 2009

கேள்வி: தமிழீயத்திற்கானதாக என்ன அரசியல் அமைப்பை நீங்கள் கருதுகிறீர்கள்?

பிரபாகரன்: அது தமிழீழத்தின் ஒரு சோசலிச அரசாக இருக்கும். மேலும் மக்களால் ஆதரிக்கப்படும் ஒரு தனி அரசியல் கட்சி மட்டும் அங்கிருக்கும். நான் பலகட்சி ஜனநாயகத்துக்கு எதிரானவன். அந்த ஒரு கட்சி ஆட்சி மூலமாகத்தான் ஈழத்தை துரிதமாக நாங்கள் முன்னேற்ற முடியும். ஒரு சோசலிச அமைப்பில் மக்களுடைய தேவைகள் மிக முக்கியமானவை.

கேள்வி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை வைத்திருப்பீர்களா?

பிரபாகரன்: இல்லை. மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே கட்சி மட்டும் உள்ள யுகோஸ்லாவியாவில் உள்ளதைப் போன்றதொரு பாணியிலான மக்கள் ஜனநாயகமாக இருக்கும்.

கேள்வி: டெலோ மீது ஒரு யுத்தத்தை நீங்கள் தொடுப்பதற்கான காரணங்கள் என்ன? தீவிரவாதிகளிடையேயான ஒற்றுமையின்மை உங்கள் இயக்கத்தை பலவீனப்படுத்தும் என்று நீங்கள் கருதவில்லையா?

பிரபாகரன்: எங்கள் போராட்டத்தில் ஒரு ஒருமைப்பட்ட அணுகுமுறையை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். எங்களுக்குள் நிலவும் எந்த ஒற்றுமையின்மையும் தமிழ் இயக்கம் முழுவதையும் பலவீனப்படுத்தும். எனது கருத்தின்படி போராட்டத்துக்கு தலைமையேற்க ஒரேயொரு தீவிரவாத குழு மட்டுமே இருக்கவேண்டும். மேலும் சிரீலங்கா இராணுவ தாக்குதல்கள் பலவற்றை எங்கள் புலிகள் மட்டுமே முறியடிக்க முடிந்தது. ஒரு ஒருமைப்பட்ட தனி இயக்கத்தோடு போரிடுவது சிரீலங்கா இராணுவத்துக்கு ஆபத்தானதாக இருக்கும். இப்போது ஒரே ஒருமைப்பட்டதாக புலிகள் இயக்கம் இருக்கிறது.

– 1986ம் ஆண்டு ஜூன் மாதம், ஆங்கில ‘இந்தியா டுடே’ மாதமிருமுறை இதழுக்கு பிரபாகரன் அளித்த பேட்டியிலிருந்து

பிரபாகரனுக்கு

ஈழ மக்கள் மருத்துவ வசதியில்லாமல் தொற்று நோய்க்கும், இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கும் ஆளாகி தவித்து வரும் நேரத்தில், இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

உன்னை தோழர் என்று அழைக்கவோ, போராளி என ஒப்புக் கொள்ளவோ மனம் மறுக்கிறது. பசி, பட்டினியுடன் அடுத்த விநாடி உயிர் வாழ்வோமா என்ற நிச்சயமற்ற நிலமையில் ஒரு இனமே அழிந்து கொண்டிருக்கும்போது, பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி சகோதரிகள் கதறிக் கொண்டிருக்கும்போதுஎப்படி உன்னை புரட்சியாளனாக, மதிக்க முடியும்?

ஈழத்தமிழர்களின் இன்றைய நிலமைக்கு யார் காரணம் என எப்போதாவது உனக்குள் கேட்டிருக்கிறாயா? சிங்கள இனவெறிதான் இதற்கு காரணம்இதுகூடவா தெரியாது என்று சொல்லிவிட்டு போகாதே. சிங்கள இனவெறி மட்டுமல்ல, உனது பாசிச நடவடிக்கைகளும் இன்றைய ஈழ நிலமைக்கு காரணம். இதுதான் உண்மை.

உன்னையும், உனது இயக்கத்தையும் வளர்த்து ஆளாக்கியது யார்? சத்தியமாக ஈழத்தமிழர்களல்ல. இந்திய உளவுப்படை! அதனால்தான் ஆரம்பம் முதலே உனது பயணம் தெற்காசிய பிரதேசத்தின் நாட்டாமையாக வலம் வரத் துடிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் உதவியை எதிர்பார்த்து நிற்பதாக அமைந்துவிட்டது. இது போதாதென்று உலக போலீஸ்காரனான அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் பிச்சை வேறு

ஏன் பிரபாகரா, குள்ளநரிகளும் ஓநாய்களும், எதற்காக, எதன் பொருட்டு உதவி செய்யும், வளர்த்து ஆளாக்கும் என்ற தெளிவில்லாமலா ஒரு இயக்கத்தை கட்டி எழுப்பினாய்? அதுசரி, ‘விடுதலைப் புலிகள்இயக்கத்துக்கு என்ன அரசியல் தெளிவு, சித்தாந்தம் இருக்கிறது? உனக்கு அரசியல் ஆலோசகராக இருந்த பாலசிங்கம் ஒரு போலி கம்யூனிஸ்ட். இந்திய உளவுத்துறையின்முழுநேர ஊழியனாகபணிபுரிந்த ஆள். அப்புறம் பழ. நெடுமாறன் வகையறா. பாசிஸ்ட் இந்திராகாந்தியை ஆதரித்த பழ. நெடுமாறனால் என்ன விதமான அரசியல் தெளிவை உனக்குள் ஏற்படுத்தியிருக்க முடியும்? தமிழக நக்சல்பாரிகளை கொடூரமாக தாக்கிய தேவாரம், மோகன்தாஸ் போன்ற அடியாட்களை பராமரித்த எம்.ஜி. இராமச்சந்திரனை புகழ்ந்த பழ. நெடுமாறானால் எப்படி போராளிகளுக்கு சித்தாந்தத்தை கற்று தந்திருக்க முடியும்?

அதனால்தான் உன்னால் உலகம் முழுக்க அரசியல்ரீதியான ஆதரவை திரட்ட முடியவில்லை. அரசியல் உரிமையை வென்றெடுக்க முடியவில்லை. எழுதப்பட்ட, எழுதப்படாத வரலாற்று நெடுகிலும், ‘ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது, சித்தாந்தமல்ல. மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதிய ஜனநாயக் புரட்சியாக இருக்கும்’ என்று காணப்படுகிறதேஇதை நீ கற்காமல் போனதால்தான், உலகிலுள்ள புரட்சிகர இயக்கங்களுடன் உன்னால் தொடர்பு கொள்ளவோ, ஆதரவு திரட்டவோ முடியவில்லை.

புரட்சிகர நடவடிக்கையில் உன்னால் ஏன் இறங்க முடியாமல் போயிற்று?

காரணம் உனது பிறப்பு! (புலிகள் இயக்கத்தின் தோற்றத்தை குறிப்பிடுகிறேன்). எல்.டி.டி., எனப்படும் புலிகள் இயக்கம் வடக்கு மாகாணமான யாழ்பாணம் வளைகுடா பிராந்தியத்தை தளமாக கொண்டுதானே செயல்பட ஆரம்பித்தது. மேல்சாதி முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, பணக்கார விவசாயப் பின்னணியில் உருவான, உனது இயக்கத்தால், ஏகாதிபத்திய, பாசிச அரசாங்கத்தின் வால் பிடித்தபடி செல்லத்தான் முடியும். ஈழ மக்களை இப்படியான அவலநிலைக்குத்தான் கொண்டுவந்து நிறுத்த முடியும்.

தமிழக ஓட்டுக் கட்சிகள் என்னை ஆதரிக்கிறார்கள் என சந்தோஷப்படாதே. உனது பிறப்பை போலவே (இங்கும் புலிகள் இயக்கத்தின் தோற்றத்தை குறிப்பிடுகிறேன்) தமிழக ஓட்டுப் பொறுக்கிகளின் பிறப்பும் மேல்சாதி முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, பணக்கார விவசாயப் பின்னணியில் உருவானவைதான். அதனால்தான் ஓட்டுக் கட்சிகள் உன் புகழ்பாடுகிறார்கள்.

பிரபாகரா, ஈழத்தில் சொந்தக் காலிலும், வெளியில் புரட்சியாளர்களையும், பரந்துபட்ட மக்களையும் சார்ந்து நிற்கும் யுத்த தந்திரங்களை நீ கற்றிருந்தால், இன்று ஈழத்தின் நிலமையே வேறாக இருக்கும். ஆனால், இந்த போர்த்தந்திரங்களை உனது அரசியல் ஆலோசகராக தன் வாழ்நாள்வரை இருந்த பாலசிங்கம் சொல்லித்தந்திருக்க மாட்டான். காரணம் முன்பே சொன்னபடி பாலசிங்கமே ஒரு போலி கம்யூனிஸ்ட். அப்படியே தப்பித்தவறி பாலசிங்கம் உனக்கு இதையெல்லாம் சொல்ல வந்திருந்தாலும் நீ அதை செவிகொடுத்து கேட்டிருக்க மாட்டாய். காரணம், நீ முகஸ்துதியால் உருவானவன்.

பாசிஸ்டுகளிலேயே இரண்டுவகை உண்டு. ஒரு பிரிவினர் முகஸ்துதியால் சூழ்ந்திருப்பர். இன்னொரு பிரிவினர் முகஸ்துதியால் உருவாக்கப்படுவர். நீ இரண்டாவது வகையை சேர்ந்தவன்.

வரலாற்றில் தனிநபர்களின் பாத்திரம் குறித்த இயக்க இயல் கண்ணோட்டம் புரட்சியாளர்களுக்கு உண்டு. சரித்திரம் சில நாயகர்களை உருவாக்குவது போலவே, சரித்திரத்தின் போக்கை மாற்றும் பங்கும் இவர்களுக்கு உண்டு. இந்த விஷயம் உனக்கு பொருந்தாது.

காரணம், வசந்த் அண்ட் கோ விளம்பரத்தில் எல்லாம் கழிசடை வசந்தகுமார் சிரித்தபடி போஸ் கொடுப்பது போலவே, எல்லா புகைப்படத்துக்கும் நீ போஸ் கொடுக்கிறாய். இந்தியாவில் நீ இருந்த காலத்தில், தமிழகத்திலுள்ள அனைத்து பத்திரிகைகளிலும் உனது பேட்டிகளும், செய்திகளும் வந்தன. அந்த விஷயத்தில் பாலசிங்கம் ஒரு திறமையான பி.ஆர்.வோ.வாக செயல்பட்டான். கிட்டத்தட்ட ஜூனியர்விகடன், உனது பிரச்சார பீரங்கியாக இருந்தது. இதெல்லாம் உனக்கு கிடைத்த அங்கீகாரம் என நினைத்தாயா? அடப்பாவமேபிரபாகரா, இதற்கெல்லாம் ஆதாரமாக இந்திய உளவுத்துறை இருந்ததப்பா. அப்போது நீ, அவர்களது செல்லப் பிள்ளையல்லவா? அதனால் உன்னை சிங்காரித்து அலங்கரித்தார்கள். விதவிதமாக படம்பிடித்தார்கள். ஊடகங்கள் வழியாக உன்னை குஷிப்படுத்தினார்கள். இப்போது இந்திய உளவுத்துறைக்கு நீ வேண்டாதவனாகிவிட்டாய். எனவே தொடர்புசாதனங்களும் உனக்கு எதிராக இருக்கின்றன. இதை புரிந்து கொள்ளாமல் இப்போதும் நீ, இந்தியா ஏதாவது செய்யுமா என ஏக்கத்துடன் காத்திருக்கிறாய்.

ஒன்றை புரிந்து கொள் பிரபாகராஉண்மையான புரட்சியாளனும், போராளியும் ஒருபோதும் தன்னை முன்னிலைப்படுத்த மாட்டான். இயக்கத்தையே முன்னிருத்துவான். புரட்சியாளர்களின் அகராதியில் எப்போதுமே, ‘நான்கிடையாது. ‘நாங்கள்தான்.

உனது புகழ்பெற்ற வாசகங்கள் என்ன? யுத்த முனையில் எதுவும்எனதுஉத்தரவுபடியே நடக்கும். அவசர முடிவுகள் எடுக்க அங்கேயுள்ளஎனதுதளபதிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எல்லோரும்நான்எப்படி சிந்திப்பேனோ, அப்படி சிந்திக்க பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்…”

அடேங்கப்பா, ஒரு இயக்கத்தையே அடியாள் படையைப் போல் நடத்தும் வல்லமை பாசிஸ்டுகளுக்கு மட்டுமே கைவந்த கலை. அதனால்தான் அது, உனது கலையாகவும் இருக்கிறதா?

இலங்கையின் அதிபனாக இருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் உனக்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ராஜபக்சே ஒரு சிங்கள பிரபாகரன் என்றால், நீயொரு தமிழ் ராஜபக்சே. ஒரே தளத்தில், ஒரே சிந்தனையில் உள்ள நீங்கள் இருவரும் (இரண்டு பாசிஸ்டுகளும்) மோதுவதால் ஒரு இனமே சீர்குலைந்து போயிருக்கிறது.

அடிக்கடி நீ சோசலிசம், மக்கள் ஜனநாயகம் என உச்சரித்து வார்த்தை விளையாட்டை நடத்தலாம். ஆனால், இட்லர் கூட தேசிய சோசலிசம், கட்டுப்பாடு, ஒழுங்கு, தேசிய அவமானத்துக்கு பழிவாங்குவது, தேசிய கெளரவத்தை நிலை நாட்டுவது என்ற பெயரில்தான் ஆட்சிக்கு வந்தான் இதை வரலாறு அறியும் 

மீண்டும் அழுத்தம்திருத்தமாக சொல்கிறேன். எந்தவொரு இராணுவ வெற்றியும் நிரந்தரமானதல்ல. இது உனக்கு மட்டுமல்ல, இலங்கை இராணுவத்துக்கும் பொருந்தும்.
என்றைக்குமே நீ, தமிழ் மக்கள் மத்தியில் உன் அரசியல் கொள்கையை முன்வைத்து ஆதரவு திரட்டியது கிடையாது. உனக்கு போட்டியான அமைப்புகள் புரிந்த மக்கள் விரோதச் செயற்பாடுகளை முன்நிறுத்தியே உனக்கான ஆதரவைத் திரட்டினாய். அதே போன்று இலங்கை இராணுவம் ஏற்படுத்துகின்ற அழிவுகளையும் இனஒடுக்கு முறையையும் பிரச்சாரப்படுத்தியே உனது இருப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறாய். இந்தப் போக்கினால்தான் இன்று தமிழ் இனத்துக்கு அழிவை தேடித் தந்திருக்கிறாய்.
இனியாவது புரட்சியாளனாக மலர முயற்சி செய். அதுதான் இதுவரை நீ செய்த படுகொலைக்கு பரிகாரமாக இருக்கும்
பெரும்பாலான தமிழக மக்கள், ஈழத்தமிழர்களுக்கு உணர்வுப்பூர்வமாகவும், உள்ளப்பூர்வமாகவும் ஆதரவு தருகிறார்கள்.   புரட்சிகர சக்தியாக மலர்ந்து இதை ஒன்று திரட்டு. மார்க்சிய – லெனினிய – மாசேதுங் பாதையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுத்தரும்.

– சூன்யம்

பின்குறிப்பு : 1982 நவம்பர் 27ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளி லெப்.சங்கர் உயிரிழந்ததன் ஞாபகமாக, ஆண்டுதோறும் உயிரிழந்த (விதைக்கப்பட்ட) விடுதலைப் புலிகள் அனைவரது தினமாக மாவீரர் தினம் நினைவு கூரப்படுகிறது. பிரபாகரனின் வருடாந்தஅறிக்கையும் ந்தத் தினத்தில் வெளியிடப்படுவதால் இந்நாள் விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை மிக முக்கிய தினமாக அமைகிறது.

1982 ல் முதல் மாவீரன் உயிரிழந்த போதும், 1989 முதலேயே மாவீரர் தினம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு கலாச்சார வடிவமாக்கப்பட்டது. ஆனால், 1976ல் முன்வைக்கப்பட்ட தமிழீழப் பிரகடனத்துக்கும் பிரபாகரனின் மாவீரர் உரைக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. தமிழ் ஊடகங்கள் குறிப்பிடும் அளவுக்கு மாவீரர் தின உரை முக்கியத்துவமானதாகவும் இருப்பதில்லை. அவ்வுரை பெரும்பாலும் கடந்த காலத்தின் தொகுப்பாகவே இருக்கிறது. இந்தத் தொகுப்பை பார்த்தாலே எந்தளவுக்கு சித்தாந்தம் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது புரியும்.

நவம்பர் 1992: இந்த மிக முக்கியமான கடினமான நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்களுடைய மக்களையும் மண்ணையும் காப்பாற்றுவதற்கு போராடுவதைத் தவிர வேறுவழி உண்டா? எங்கள் சுதந்திரத்தை வெற்றி கொள்ள நாங்கள் போராட வேண்டும். பேரம் பேசுவதற்கு சுதந்திரம் விற்பனைப் பொருளல்ல. அது எமது உரிமை இரத்தம் சிந்தியே அதனை வெற்றி கொள்ள முடியும். எதுவும் யாரும் எங்களைத் தடுக்க முடியாது. நாங்கள் தொடர்ந்தும் உறுதியுடன் போராடுவோம்.
நவம்பர் 1993: சுதந்திர நாட்டை பெற்றுத்தர மக்களின் ஆணையைப் பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதாக போராடிய ஆயுதக் குழுக்களும் தமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளன. மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்துள்ளன. எங்கள் இயக்கம் மட்டுமே கொள்கையில் தொடர்ந்தும் உறுதியாக உள்ளது. எமது போராட்டத்தின் உணர்வுபூர்வ மான நோக்கம் மட்டும் வெற்றியைப் பெற்றுத் தராது. எங்கள் தீர்மானத்தில் நாங்கள் பலமாக உறுதியாக இருக்க வேண்டும். போர்க் கலையில் திறமையானவர்களாக இருக்க வேண்டும்.
நவம்பர் 1994: தமிழ் மக்களுடைய தேசியப் பிரச்சனைக்கு சமாதானத் தீர்வைக் காணுவதற்கான அடிகளை எடுத்தால் நாங்கள் சந்திரிகா அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
நவம்பர் 1995: தமிழ் தேசத்திற்கான இராணுவ பலத்தை கட்டமைப்பது தவிர்க்க முடியாதது. இன்றைய வரலாற்றின் தேவையும் கூட. இளம் தலைமுறையினர் தாமதமின்றி எமது விடுதலை இயக்கத்தில் இணைய வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறேன். எவ்வளவு விரைவில் அவர்கள் வந்து இணைகிறார்களோ அவ்வளவு விரைவில் எங்கள் போராட்டத்தின் இலக்கை நாம் அடைய முடியும்.
நவம்பர் 1996: ஆக்கிரமிப்புப் படைகளை எமது மண்ணில் இருந்து வெளியெற்றும் வரை எங்கள் தேசம் விடுதலை அடையும் வரை தொடர்ந்தும் போராடுவோம்.
நவம்பர் 1997: இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு சிங்களம் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குமென நாம் எதிர்பார்க்கவில்லை. நாம் எமது விடுதலை இலட்சியத்தை அடைய தொடர்ந்து போராடுவோம்.
நவம்பர் 1998: தமிழீழத் தனியரசே தமிழ் மக்களின் இறுதியான தீர்வாக அமையுமென உறுதியாக நம்பி நாம் எமது லட்சியப் போரைத் தொடருவோம்.
நவம்பர் 1999: சுதந்திர தமிழீழ தனியரசே எமது தேசிய பிரச்சினைக்கு இறுதியான உறுதியான தீர்வு என்பதை எமது மக்கள் எப்பொழுதோ தீர்மானித்துவிட்டார்கள். எமது போராட்ட இலக்கு ஒளிமயமான எதிர்காலமாக எமது கண்களுக்குத் தெரிகிறது. நாம் நம்பிக்கையுடன் எமது இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம்.
நவம்பர் 2000: சமாதான பேச்சுக்கு உகந்ததாக சமாதான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். சிங்கள தேசம் இனவாதப் பிடியிலிருந்து விடுபடாமல் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறையைதை; தொடருமானால் நாம் பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.
நவம்பர் 2001: பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாயின் எமது இயக்கம் மீது விதிக்கப்பட்டு உள்ள தடை நீக்கப்பட வேண்டும். போர் நெருக்கடிகளும் பொருளாதாரத் தடைகளும் நீங்கிய இயல்பான இயல்பான அமைதியான சூழ்நிலையில் தான் பேச்சுக்கள் நடைபெற வேண்டும். தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழிமூலம் தீர்வு காணப்பட்டால் தமிழர்களும் சிங்களவர்களும் ஏனைய சமூகத்தினரும் இந்த அழகிய தீவில், ஒத்திசைவாக, ஒன்றுகூடி வாழ முடியும். மறுத்தால் தமிழர்களாகிய நாம் பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழி எதுமில்லை.
நவம்பர் 2002: நம்பிக்கையூட்டும் நல்லெண்ண சூழ் நிலையில், அரசுபுலிகள் மத்தியிலான பேச்சுக்கள் முன்னேற்றம் அடைந்து செல்வது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. காலத்திற்கு ஏற்ப, வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்டத்தின் வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட லட்சியம் மாறப்போவதில்லை. சுமாதானச் பேச்சுக்களை பேரினவாத சக்திகள் குழப்பிவிட்டால், அது தமிழ் மக்களைத் தனியரசுப் பாதையில் இட்டுச் செல்லும்.
நவம்பர் 2003: சமரசத்திற்கும் சமாதான முன்னெடுப்பு களுக்கும் எம்மால் முடிந்தளவு நாம் முயற்சித்து வருகிறோம். சிங்கள இனவாத ஆளும் வர்க்கம் தொடர்ந்தும் எமது மக்களின் உரிமைகளை மறுத்து, சமரசத் தீர்வுகளை எதிர்த்து ஒடுக்கு முறையைத் தொடருமானால் தனியரசைக் கட்டி எழுப்புவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.
நவம்பர் 2004: நாம் முன் வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலம் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள்விடுகிறோம். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்தால் நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறுவழயில்லை.
நவம்பர் 2005: நியாயமான தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் முன் வைக்க வேண்டும். காலத்தை இழுத்தடிக்க முற்படுமானால் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
நவம்பர் 2006: சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வை ஒரு போதும் முன் வைக்கப்போவதில்லை என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி யிருக்கிறது. எனவே சுதந்திரத் தழிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கிறோம்.
நவம்பர் 2007: சிங்கள தேசத்தை நம்ப முடியாது என்பது உறுதியாகிவிட்டது. இனஅழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவப் பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி, சர்வதேசச் சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்க வேண்டும். நிறைந்துகிடக்கும் அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் தாருங்கள். நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்.
மாவீரர் தின உரைகளின் தொகுப்பு, இந்த இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. நன்றி: த.ஜெயபாலன்  http://thesamnet.co.uk/?p=4866